ஒரே மாதத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை 20% உயர்வு: நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு தகர்கிறது

பெட்ரோல், டீசல் விலை மற்றும் மூலப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக சிமெண்ட், மணல் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருள்களின் விலை, ஒரு மாதத்துக்குள் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒரே மாதத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை 20% உயர்வு: நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு தகர்கிறது
Updated on
2 min read

பெட்ரோல், டீசல் விலை மற்றும் மூலப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக சிமெண்ட், மணல் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருள்களின் விலை, ஒரு மாதத்துக்குள் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ரயில் சரக்குக் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கட்டுமானப் பொருள்களின் விலை மேலும் 3 சதவீதம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. விண்ணைத் தொடும் இந்த விலை உயர்வால், நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவில் மண் விழுந்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள், மூலப் பொருள்களின் உயர்வைக் காரணம் காட்டி அண்மையில் மூட்டைக்கு ரூ.50 விலையை உயர்த்தின.

இதைத் தவிர செங்கல் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 3000 செங்கல்கள் கொண்ட ஒரு யூனிட்டின் விலை கடந்த மாதத்தில் ரூ.19 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து. தற்போது அதே அளவிலான செங்கல்கள் ரூ.19,500-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

மணல் தட்டுப்பாடு: சென்னையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்காக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மணல் வந்து கொண்டிருக்கிறது. விதிகளை மீறி குவாரிகளில் மணல் அள்ளப்படுவதாகக் கூறி விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள சில குவாரிகளுக்கு அண்மையில் சீல் வைக்கப்பட்டது.

இதனால் சென்னைக்கு வரும் மணல் லாரிகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாகக் குறைந்துள்ளதாகக் கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆற்றுப் படுகைகளில் சட்ட விரோதமாக எடுக்கப்படும் மணல் சென்னைக்கு அதிக அளவில் வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மணல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் ஒரு கன அடி மணல் ரூ.32-ஆக இருந்தது. தற்போது அதே அளவு மணல் ரூ.45-லிருந்து ரூ.55-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர கட்டட வேலையாள்களின் கூலி கடந்த சில மாதங்களில் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கனவாகும் சொந்த வீடு:

தொடர்ந்து உயர்ந்து வரும் கட்டுமானப் பொருள்களின் விலையால், ஒரு சதுர அடிக்கான கட்டுமான செலவு ரூ.250 வரை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை கட்டுமான நிறுவனங்கள் ஒரு சதுர அடி கட்டுவதற்காக வாங்கிய தொகை ரூ.1,500. தற்போது அது ரூ.1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் சொந்த வீடு கட்டும் கனவில் வாழும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காரணம் என்ன?

கட்டுமானப் பொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்வதற்கான காரணம் குறித்து இந்திய கட்டுமான நிறுவன சங்க நிர்வாகிகள் கூறியது:

சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை ஆண்டுதோறும் 10 லிருந்து 15 சதவீதம் உயர்வது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதத்துக்குள் அதன் விலை 20 சதவீதம் உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிமெண்ட் விலையை அதன் உற்பத்தி நிறுவனங்கள் திடீரென உயர்த்தியுள்ளன. சிமெண்ட் விலையை நிர்ணயிக்க பிரத்யேகமாக ஒழுங்கு முறை ஆணையம் இல்லாததால், சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் விலையை நிர்ணயித்துக் கொள்கின்றன.

மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மணல், செங்கல், கம்பி உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. அடுத்த மாதத்தில் ரயில்வே சரக்கு கட்டண உயர்வு அமலாகும்பட்சத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com