ஆகஸ்ட் 8-இல் கம்பன் கழக 40-வது ஆண்டு விழா

சென்னை கம்பன் கழகத்தின் 40-ஆவது ஆண்டு விழா ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்குகிறது என கம்பன் கழகத்தின் தலைவர் இராம.வீரப்பன் கூறினார்.
ஆகஸ்ட் 8-இல் கம்பன் கழக 40-வது ஆண்டு விழா

சென்னை கம்பன் கழகத்தின் 40-ஆவது ஆண்டு விழா ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்குகிறது என கம்பன் கழகத்தின் தலைவர் இராம.வீரப்பன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: 

கம்பன் கழகம் சார்பில் நடத்தப்படும் கம்பன் விழா 40-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 40-ஆவது கம்பன் விழா நடைபெறவுள்ளது.

 விழா ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. "யாவரும் கேளிர்' என்ற தலைப்பில் இந்த ஆண்டு தொடங்கும் கம்பன் விழாவின் முதல் நாளில் கலை, இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்கும் 14 பேருக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இதில் கம்பர் விருதுக்கு ரா.செல்வ கணபதியும், பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசுக்கு ரா.மோகனும், நீதிபதி மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசுக்கு கவிஞர் தணிகைச் செல்வனும், கம்பன் பற்றிய சிறந்த நூலுக்கான அ.ச.ஞா.நினைவுப் பரிசுக்கு இலங்கை ஜெயராஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மாநில அளவில் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 48 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.

விழாவில் வள்ளல் சடையப்பர், கம்பன் அடிப்பொடி சா.கணேசனார், நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஆகியோரின் பெயர்களில் அரங்குகள் இடம்பெறவுள்ளன.

அதேபோல, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் எழுதிய "கம்பனில் சட்டமும் நீதியும்' எனும் ஏவி.எம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலும், கம்பன் கழகம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய "மூன்றெழுத்தில் முழுக்காப்பியம்', மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி தொடர் சொற்பொழிவு ஒலிப்பேழைகளும் வெளியிடப்படுகின்றன.

"இப்பொழுது எதற்கு ராமாயணம்?', "ராவணனை அறவழிப்படுத்த முயன்றதில் முதன்மை பெறும் அறவுரை', "இன்றைய இளைஞர்கள் பெரிதும் பின்பற்ற வேண்டிய பண்புகளைத் தன்னகத்தே கொண்ட பாத்திரம்', "எவர் சந்திப்பு ராமனின் அவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணை நிற்கிறது' உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வரங்கம், மாணவர் விவாத அரங்கம், சுழலும் சொல்லரங்கம், பட்டிமன்றம் போன்றவை நடைபெறும் என்றார் அவர்.

கம்பன் கழகத்தின் துணைத் தலைவரும் தயாரிப்பாளருமான ஏவி.எம்.சரவணன், செயலாளர் இலக்கியவீதி இனியவன், இணைச் செயலாளர் சாரதாநம்பி ஆரூரண், பொருளாளர் மு.தருமராசன் உள்ளிட்டோர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com