தக்கர்பாபா வித்யாலயாவில் 1 கோடி லிட்டர் மழை நீரை சேமிக்கும் திட்டம் தொடக்கம்

சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் ஆண்டுக்கு 1 கோடி லிட்டர் மழை நீரைச் சேமிக்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
தக்கர்பாபா வித்யாலயாவில் 1 கோடி லிட்டர் மழை நீரை சேமிக்கும் திட்டம் தொடக்கம்
Published on
Updated on
1 min read

சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் ஆண்டுக்கு 1 கோடி லிட்டர் மழை நீரைச் சேமிக்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) திட்டத்தின் கீழ், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் வழங்கிய ரூ.5 லட்சத்தில், இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஆகாஷ் கங்கா அறக்கட்டளை அமைத்துள்ளது.

தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர்பாபா வித்யாலயம் வளாகத்தில் 4 அடி விட்டமும், 15 அடி ஆழமும் கொண்ட 9 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டடங்களின் மொட்டை மாடியிலிருந்தும், மைதானத்திலிருந்தும் வரும் மழைநீர் இந்த 9 கிணறுகள் மூலம் பூமிக்கு விடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி லிட்டர் மழைநீரை சேமிக்க முடியும் என்கிறார் இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவிய ஆகாஷ் கங்கா அறக்கட்டளை அறங்காவலர் சேகர் ராகவன்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, தக்கர்பாபா வித்யாலயம் வளாகத்தில் நிலத்தடி நீர் நல்ல நிலையில் உள்ளது. இதைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கவும் இந்த மழை நீர் அமைப்புகள் உதவும். நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்.) திட்டத்தின் கீழ், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் வழங்கிய நிதி உதவியுடன் மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள பாலமந்திர் பள்ளி ஆகிய இடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவியுள்ளோம். இது நல்ல பலனைத் தந்துள்ளது. தற்போது சேத்துப்பட்டில் உள்ள சேவாசதன் வளாகத்தில் மழை நீர் சேகரிப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் நல்ல குடிநீரும் கிடைக்கும் என்றார்.

தக்கர்பாபா வித்யாலயம் செயலாளர் ஸ்தாணுநாதன், இணைச் செயலாளர் மாருதி, மழைநீர் நிபுணர் இந்துகாந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com