தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிமே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மெரீனா அலையையும், மெட்ரோ ரயிலையும் வியந்த குழந்தைகள்! 

யானைகளைப் பார்த்தபோதும் பயந்ததில்லை; ஆனால், மெரீனாவில் எழுந்து வந்த அலை எங்களை மிரளவைத்துவிட்டது

News image
Updated On :13 செப்டம்பர் 2015, 9:48 pm

யானைகளைப் பார்த்தபோதும் பயந்ததில்லை; ஆனால், மெரீனாவில் எழுந்து வந்த அலை எங்களை மிரளவைத்துவிட்டது என்கின்றனர் மீட்கப்பட்ட அந்த குழந்தைத் தொழிலாளர்கள்.
 ஈரோடு மாவட்டம், பர்கூர் மேற்கு மலைப் பகுதியைச் சேர்ந்த கொங்காடை என்கிற அவர்களுடைய கிராமத்தில் தார்ச் சாலையோ, பேருந்து வசதியோ, மருத்துவமனையோ கிடையாது.
 மேம்பாலங்கள், உயர்ந்த கட்டடங்கள், பெரிய சாலைகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு அதிசயம்தான். அதிலும் சாலையிலிருந்து மிக உயரத்தில், கட்டடங்களுக்கு இடையே புகுந்து மெட்ரோ ரயிலில் பயணித்தது புது அனுபவம் என சிலாகிக்கின்றனர் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளியில் படிக்கும் சேதுபதியும், ரோஜாவும்.
 தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட இவர்கள், இப்போது சிறார் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
 நகரத்தையோ, ரயிலையே பார்த்திராத இந்த மாணவர்கள், கடந்த 2013-இல் முதன் முறையாக ஈரோடுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற போதுதான், மிக உயர்ந்த கட்டடங்களையும், பாலங்களையும், ரயிலையும் பார்த்து அதிசயத்துள்ளனர்.
 இப்போது இரண்டாவது பயணமாக சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த 35 மாணவர்கள் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்துவரப்பட்டனர். முதல் நாளில் மெரீனாவைப் பார்த்த இந்த மாணவர்கள், இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, பிர்லா கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்காவை பார்வையிட்டனர். அதோடு, சென்னைக்கு புது வரவான மெட்ரோ ரயிலிலும் பயணித்தனர்.
 இந்த அனுபவம் குறித்து சிறப்புப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் கொங்காடை கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி (12), ரோஜா (12) ஆகியோர் கூறியது:
 ஈரோடுக்கு முதல்முறையாக கடந்த 2013-இல் சென்றோம். அங்கு ஏராளமான பேருந்துகள், தார்ச் சாலைகள், பாலங்கள், ரயில் என அனைத்தும் வியப்பாக இருந்தது.
 இப்போது சென்னை வந்தது, இரு மடங்கு ஆச்சரியத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது. ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்ததுதான் எங்களுடைய முதல் ரயில் பயணம். எங்களுடைய பெற்றோர் இன்னும் ரயிலைப் பார்த்தது இல்லை.
 சென்னை வந்ததும் முதலில் மெரீனா சென்றோம். பர்கூர் மலைக் காட்டில், பல வகை பூச்சிகளையும், யானைகளையும் பார்த்து சிறிதும் பயப்படமாட்டோம். ஆனால், மெரீனாவில் எழுந்து வந்த அலை எங்களை மிரள வைத்துவிட்டது.
 மெட்ரோ ரயிலில் பயணித்தது வியப்பாக இருந்தது. உயரத்தில், வீடுகளுக்கு இடையே புகுந்துகொண்டு சென்ற அந்த ரயிலில் பயணித்தது புது அனுபவம். ஈரோட்டை காட்டிலும் இங்கு மிகப் பெரிய அகலமான தார்ச் சாலைகள், ஏராளமான மேம்பாலங்கள், உயரமான கட்டடங்கள், பெரிய வசதி படைத்த மருத்துவமனைகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு அதிசயம்தான்.
 ஏனெனில், 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட எங்களுடைய மலைப் பகுதியில் இன்று வரை தார்ச் சாலைகளே கிடையாது. பேருந்து வசதியும் இல்லை. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தியூருக்குத்தான் செல்ல வேண்டும். அதுவும் வேன்கள் மூலம்தான் செல்ல முடியும். ஒரு முறை சென்று வர சிறுவர்களுக்கு ரூ.40, பெரியவர்களுக்கு ரூ.100 கட்டணம்.
 தமிழக அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று இப்போது எங்களுடைய கொங்காடை கிராமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற போதும், அரிதாகவே அதைப் பயன்படுத்த முடிகிறது.
 இதனால் காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு மருத்துவமனைக்குச் செல்ல மாட்டோம். மூலிகை மருத்துவம்தான் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 இந்த மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்து வந்த சுடர் தன்னார்வ அமைப்பு நிர்வாகி நடராஜன் கூறும்போது, கல்வியோடு, நேரடி கள அனுபவம் மூலம் இந்த மாணவர்களின் நிலையை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே இந்த கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.