ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

புழல் சிறையில் காவலர்கள் மீது தாக்குதல்:6 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

புழல் சிறையில் வெள்ளிக்கிழமை சிறைக் காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, 6 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

Updated On :

புழல் சிறையில் வெள்ளிக்கிழமை சிறைக் காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, 6 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இதுகுறித்த விவரம்:

சென்னை, புழல் சிறையின் இரண்டாவது பகுதியில் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் உயர் பாதுகாப்புப் பகுதி இரண்டில் தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான 16 பேர் என மொத்தம் 19 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்தப் பகுதியில் சிறைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையிடச் சென்றனர். அப்போது கைதிகளுக்கும், சிறைத் துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கைதிகள், கட்டை, இரும்புக் கம்பி ஆகியவற்றைக் கொண்டு சிறைத் துறை அதிகாரிகளையும், காவலர்களையும் தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் சிறைக்காவலர் முத்துமணி பலத்த காயமடைந்தார். ஜெயிலர் இளவரசன், சிறைக் காவலர்கள் ரவிமோகன், செல்வின் தேவதாசன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே பணயக் கைதிகளாக உதவி ஜெயிலர் குமார், எலக்ட்ரீஷியன் மாரி என்ற மாரியப்பன் ஆகியோரை கைதிகள் பிடித்து வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளிடம் பேச்சு நடத்தியதன் விளைவாக, இருவரும் இரவு விடுவிக்கப்பட்டனர்.

6 பேர் மாற்றம்:

இச் சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது. மோதலுக்குக் காரணமான போலீஸ் பக்ருதீன் வேலூர் மத்திய சிறைக்கும், பிலால் மாலிக் கடலூர் மத்திய சிறைக்கும், பன்னா இஸ்மாயில் மதுரை மத்திய சிறைக்கும், காஜா மொய்தீன் சேலம் மத்திய சிறைக்கும், முகமது ரபீக் என்ற முன்னா கோவை மத்திய சிறைக்கும், மண்ணடி அப்துல்லா திருச்சி மத்திய சிறைக்கும் சனிக்கிழமை காலை மாற்றப்பட்டனர். சாதிக் பாட்ஷா புழல் சிறையிலேயே மற்றொரு பகுதிக்கு மாற்றப்பட்டார்.

மேலும் விருப்பத்தின் பேரில் வேறு சிறைக்கு மாற்ற ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த கைதிகள் 4 பேரும் (மோதல் சம்பவத்தில் தொடர்பற்றவர்கள்) வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டதாக, சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்குப் பதிவு:

இதனிடையே ஜெயிலர் இளவரசன், இந்த மோதல் குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில்,பிலால் மாலிக், முகமது ரபீக் என்ற முன்னா, மண்ணடி அப்துல்லா, சாதிக் பாட்ஷா, காஜா மொய்தீன், ஹக்கீம், அப்துல் சலீம், நவாஸ், அபுதாகீர், குத்புதீன், ஜலாலுதீன், சாகுல் ஹமீது ஆகிய 14 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி, கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் இடையூறு செய்தல், அரசு அதிகாரியைத் தாக்குதல் உள்ளிட்ட 11 சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து புழல் காவல் உதவி ஆணையர் எஸ்.மன்னர்மன்னன் உத்தரவுப்படி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், முஸ்லிம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் சிறைக் காவலர்கள் சோதனை நடத்தியதால் ஏற்பட்ட விரோதம் காரணமாகவும், பக்ரீத் பண்டிகையன்று சில முஸ்லிம் கைதிகளின் குடும்பத்தினர் கொண்டுவந்த உணவுப் பொருள்களை சிறைக்குள் அனுமதிக்க மறுத்ததன் காரணமாகவும் மோதல் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

இதனிடையே தாக்குதலில் பலத்த காயமடைந்த முத்துமணி, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டார். மற்றவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இந்த மோதல் காரணமாக புழல் சிறைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் போராட்டம்

புழல் சிறையின் அருகே சிறைக் காவலர் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் வசிக்கும் சிறைக் காவலர் குடும்பத்தினர் திடீரென சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சிறைக் காவலர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், சிறைக் காவலர்களைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டபடி அந்தக் குடியிருப்பின் வாசலுக்கு வந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கைதிகளின் குடும்பத்தினர்: சிறைக்குள் நிகழ்ந்த மோதலில் கைதிகள் காயமடைந்ததாக தகவல்கள் பரவியதன் காரணமாக, புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் குடும்பத்தினர், சனிக்கிழமை காலை சிறை முன்பு குவிந்தனர். அப்போது சிறைத் துறை அதிகாரிகள், கைதிகள் காயமடையவில்லை என அவர்களிடம் தெளிவுபடுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.