சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அண்ணா பல்கலை.யில் விரைவில் பிரத்யேக "ஸ்டெம் செல்' ஆராய்ச்சி மையம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் -ஸ்டெம் செல்- (குறுத்தணுக்கள்) ஆராய்ச்சிக்கென பிரத்யேக மையம் விரைவில் உருவாக்கப்பட உள்ளது.

Updated On :2 பிப்ரவரி 2017, 10:40 pm

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் -ஸ்டெம் செல்- (குறுத்தணுக்கள்) ஆராய்ச்சிக்கென பிரத்யேக மையம் விரைவில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த குறுத்தணுக்கள் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் தேசிய அளவில் முன்னிலை வகிக்கிறது. பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, பல மருத்துவமனைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகிறது.
இந்த ஆராய்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல, அதற்கென பிரத்யேக ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி கிடைத்துவிட்டபோதும், போதிய நிதியில்லாததால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்ந்து தடைப்பட்டு வருவதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
குறுத்தணுக்கள் என்றால் என்ன? மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் செயல்பட வைப்பது, நூற்றுக்கணக்கான உயிரணுக்கள்தான். இவற்றை உருவாக்குவதே உடலில் இருக்கும் குறுத்தணுக்கள்தான் (ஸ்டெம் செல்). இவை பெருகும்போது, மேலும் பல குருத்தணுக்களையோ அல்லது வேறு வகை உயிரணுக்களையோ உருவாக்க கூடியவை.
உதாரணமாக, விபத்தில் ஒருவர் சிக்கும்போது, காயப்பட்ட திசுக்களை சரிபார்ப்பதும் இறந்த உயிரணுக்களுக்கு மாற்று உண்டாக்குவதுமே குருத்தணுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலையாகும்.
பயன்கள் என்ன? ரத்தம், எலும்பு மஜ்ஜை, தொப்புள்கொடி ரத்தம் ஆகியவற்றிலிருந்து இந்த குறுத்தணுக்களைப் பிரித்து, தேவைக்கேற்ப எலும்பு, இதயம், கல்லீரல் என உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
பார்வையை இழப்பவர்களுக்கு, மனிதக் கருவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை பயன்படுத்தி பார்வையை மீட்க முடியும்.
விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு கை, கால்கள், இடுப்பு ஆகியன செயலிழந்தவருக்கு, இந்த சிகிச்சை மூலம் ஸ்டெம் செல்களை அதிகரிக்கச் செய்து செயலிழந்த அனைத்து பாகங்களையும் மீண்டும் செயல்பட வைக்க முடியும்.
தானம் அளிக்க முன்வர வேண்டும்: நாட்டில் ஒரு ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. 10 ஆயிரம் குழந்தைகள் தலசீமியா போன்ற நோய்களுடன் பிறக்கின்றனர். இந்தப் பிரச்னைகளுக்கு குறுத்தணுக்கள் மாற்று சிகிச்சை ஒரு நல்ல தீர்வாகும். எனவே "ஸ்டெம் செல்" தானமளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் அனுராதா தனசேகரன் கூறியது:-
எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை, சவீதா பல் மருத்துவமனை, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை உள்பட 5-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளைச் செய்து வருகிறோம்.
"ஸ்டெம் செல்' மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த,பிரத்யேக ஆராய்ச்சி மையம் உருவாக்க உருவாக்க அனுமதி கிடைத்துவிட்டது. இடவசதியும் உள்ளது. ஆனால், நிதி இல்லை. ஆராய்ச்சி மையத்துக்கான கட்டடங்கள், உபகரணங்களுக்கு என சுமார் ரூ. 15 கோடி வரை செலவாகும்.
இந்த நிதி கிடைத்து, ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுவிட்டால், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு குறுத்தணுக்கள் ஆராய்ச்சியை மேம்படுத்த முடியும் என்றார் அவர்.

குறுத்தணுக்களின் பயன்கள் என்ன?

நவீன மருத்துவ உலகில், -குறுந்தணுக்கள்- மருத்துவம் ஒரு வரப்பிரசாதமாகும். இதனால், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் தங்களுடைய குறுத்தணுக்களை சேமித்து வைக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் 30 அல்லது 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், சேமித்து வைத்த குறுத்தணுக்களைக் கொண்டு குணப்படுத்தலாம்.
இந்தக் குறுத்தணுக்கள் அத்தனை ஆண்டுகள் உயிருடன் இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. குறிப்பிட்ட காலம் வரைதான் அணுக்கள் உயிருடன் இருக்கும்.
எனவே, இவ்வாறு சேமிக்கப்படும் குறுத்தணுக்கள் எத்தனை ஆண்டுகள் உயிருடன் இருக்கும் என்பதைக் கண்டறிய ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி தேவை.
ஏமாற்றும் தனியார் மருத்துவமனைகள்: பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சில தனியார் மருத்துவமனைகள் ஏமாற்றி, பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளன. ஒரு தனியார் மருத்துவமனை கல்லீரல் முழுதாகப் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்க முடியாத நிலையில் இருந்த நோயாளிக்கு இந்த குறுத்தணு சிகிச்சையை அளித்து, ரூ.1 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளது. ஆனால், அடுத்த நாளே நோயாளி உயிரிழந்தார்.
4 மாதங்கள் ஆகும்: ரத்தப் புற்றுநோய் உள்ள நோயாளிக்கு அவருடைய உடலிலிருந்து மொத்த ரத்தத்தையும் எடுத்துவிட்டு, ஸ்டெம் செல் கொடுத்தால் அது வேலை செய்யும். அதுபோல கண் பாதிப்பு உள்ள நோயாளிக்கும், ஸ்டெம் செல் சிகிச்சை உடனடியாகப் பயனளிக்கும்.
ஆனால், கல்லீரல் போன்ற உறுப்புகள் முழுவதும் செயலிழந்த, இறக்கும் தருவாயில் இருக்கும் நோயாளிக்கு குறுத்தணு மருத்துவம் ஒருபோதும் பயனளிக்காது. அவ்வாறு ஒரே நாள் இரவில் புதிய கல்லீரல் முளைத்தும் விடாது.
இப்படிப்பட்ட நோயாளிக்கு செலுத்தப்படும் குறுத்தணுக்கள், சம்பந்தப்பட்ட உறுப்புப் பகுதியுடன் இணைந்து செயலாற்றி, அந்த உறுப்பு வளர்ச்சி பெற குறந்தது 4 மாதங்களாவது ஆகும். இந்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் பரவலாக ஏற்படுத்தவும், குறுத்தணு ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் பிரத்யேக ஆராய்ச்சி மையம் பல்கலைக்கழகத்துக்கு மிக அவசியம் என்றார் பேராசிரியர் அனுராதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.