வில்லிவாக்கம் பகுதியில் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியைக் கடத்தி கொலை செய்த வழக்கில், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, வில்லிவாக்கம், பாரதி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பழ வியாபாரி வெங்கடேஷ் (27). இவரது மனைவி ஜெயந்தி (23). இவர்களின் 4 வயது மகள் காவ்யா செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கடைக்குச் சென்றிருந்த ஜெயந்தி, வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது காவ்யாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை காலை ஜெயந்தியின் வீட்டின் அருகே உள்ள புதரில் காவ்யாவின் சடலம் கிடந்தது. சிறுமியின் வாயில் நுரையும், கன்னங்களில் காயங்களும் இருந்தன. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் அச்சிறுமி தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இக்கொலை தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.