சென்னை ஆவடி - மந்தைவெளி இடையே இயக்கப்பட்டு வந்த 41டி என்ற பேருந்து சேவை கடந்த 1-ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை ஆவடி, மந்தைவெளி, அம்பத்தூர் பணிமனைகளில் இருந்து இரு மார்க்கமாக தடம் எண் 41டி மாநகரப் பேருந்து ஆவடி, பட்டரவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், டிவிஎஸ் லூகாஸ், அண்ணா நகர், கல்லூரி சாலை, டிஎம்எஸ், அடையார் கேட், எச்.எம். மருத்துவமனை வழியாக மந்தைவெளி வரை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப் பேருந்து எண் மற்றும் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதால் அவ்வழியில் உள்ள முக்கிய பேருந்து நிறுத்தங்களுக்கு நேரடி பேருந்து சேவை இல்லாமல் போனதால், தினக்கூலிகள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்து சேவை முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதால், இரண்டுக்கு மேற்பட்ட பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். வழக்கம்போல் 41டி பேருந்தை வழக்கமான வழித்தடத்தில் இயக்க வேண்டும் என போக்குவரத்துக் கழகத்துக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறுமுக நயினார் (சிஐடியு): இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் கூறியது: சில வழித்தடங்களில் பயணிகளின் கூட்டம் குறைந்ததன் காரணமாகவும், வருவாய் குறைந்திருப்பதாலும் அவ்வழித்தடங்களில் பேருந்துகளை இயக்காமல், கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில் பேருந்துகளை நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. அவ்வகையில் 41டி பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதை அரசின் கவனத்துக்கும், நிர்வாகத்தின் கவனத்துக்கும் பல முறை எடுத்துரைத்தும் எவ்வித பலனும் இல்லை என்றார் அவர்.
அதிகாரிகள் தரப்பில் விளக்கம்: இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: வண்டி எண் 41டி என்பது 41 ஆக மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பேருந்து வழக்கமான வழித்தடத்தில்தான் செல்கிறது. ஒருசில வழித்தடங்களில் குறைந்த பயணிகள் எண்ணிக்கை காரணமாக, அவற்றையொட்டியுள்ள பிற வழித்தடங்களில் அவ்வப்போது பேருந்துகளை இயக்கி வருகிறோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.