தீபாவளி பண்டிகை தினத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் பட்டாசு விற்பனை வழக்கத்தைவிட 40 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பட்டாசு வாங்குவது குறைந்தது: அரசின் இந்த உத்தரவால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலக்கம் அடைந்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் போலீஸ் நடவடிக்கை பாயுமோ என்ற அச்சத்தில் பலர் பட்டாசு வாங்குவதையே இந்த ஆண்டு குறைத்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளில் விற்பனை மந்தமாக நடைபெற்றது. சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை, நந்தனம் ஆகிய பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நகர் முழுவதும் ஆங்காங்கே உரிமம் பெற்று 900 -க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய 3 நாள்கள்தான் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை மந்தமாக இருப்பதாகவே வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆர்வம் காட்டாத பொதுமக்கள்: இதுகுறித்து தீவுத்திடல், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுக் கடைகள் அமைத்துள்ள பட்டாசு வியாபாரிகள் கூறியது: நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்ததால் பொதுமக்கள் பலர் பட்டாசு வாங்க ஆர்வம் காட்டவில்லை. பெற்றோரே தங்கள் பிள்ளைகளிடம், குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் காவல் துறையின் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கை விடுப்பதால், குழந்தைகளே பட்டாசு வாங்க தயங்குகின்றனர்.
அதேவேளையில் தீபாவளியன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பட்டாசு விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், எந்த வகை பட்டாசு வெடிக்கலாம்?, எந்த வகை பட்டாசை வெடிக்கக் கூடாது? என்று சரியாக வரையறுத்துக் கூறாததால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால்தான் பட்டாசு விற்பனை மந்தமாகியுள்ளது.
பட்டாசுகள் தேக்கம்: தீவுத்திடலில் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.8 கோடி முதல் ரூ.11 கோடி வரை பட்டாசுகள் விற்பனையாகும். இந்த ஆண்டு இதுவரை ரூ.5 கோடி அளவுக்கே பட்டாசுகள் விற்கப்பட்டுள்ளன. அதேபோன்று சென்னை மாநகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கடைகளிலும் சேர்த்து தோராயமாக ரூ.180 கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடைபெறும். ஆனால், அதில் தற்போது 60 முதல் 65 சதவீதம் அளவுக்கே விற்பனை நடைபெற்றுள்ளது. விற்பனையாகாத பட்டாசுகளை திரும்ப வாங்கிய இடத்திலேயே எங்களால் ஒப்படைக்க முடியாது. அதனால் பட்டாசு வாங்குவதற்காக செய்த முதலீட்டைகூட திரும்ப எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
முன்கூட்டியே பட்டாசு வெடிப்பு
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று காலை முதல் இரவு வரை பொதுமக்கள் தொடர்ந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு உள்ளதால் வாங்கிய பட்டாசுகளை வெடிக்க 2 மணி நேரம் போதாது. இதனால் பொதுமக்களும், சிறுவர் -சிறுமிகளும் தாங்கள் வாங்கிய பட்டாசுகளை முன் கூட்டியே வெடிக்க தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே சென்னையில் பெரும்பாலானோர் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து, சென்னையில் திங்கள்கிழமையும் அனைத்து இடங்களிலும் பட்டாசு சப்தம் காதை பிளந்தது. தெருக்களில் குழந்தைகள், பெண்கள் மத்தாப்பு, புஸ்வானம், சங்குசக்கரம் உள்ளிட்டவற்றை கொளுத்தி மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








