காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேலும் 5 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை

தமிழகத்தில் 12 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படும் நிலையில், சேவையை நீட்டிக்கும் வகையில், அரக்கோணம், வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆரணி ஆகிய 5 இடங்களில்

News image
Updated On :9 செப்டம்பர் 2018, 9:14 pm

மு. வேல்சங்கர்

தமிழகத்தில் 12 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படும் நிலையில், சேவையை நீட்டிக்கும் வகையில், அரக்கோணம், வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆரணி ஆகிய 5 இடங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் அமைக்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
 பாஸ்போர்ட் வழங்கும் பணியை வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவு மேற்கொண்டு வருகிறது. வெளிநாடு செல்வதற்கு முக்கிய ஆவணமாக பாஸ்போர்ட் இருப்பதோடு, அதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
 இந்நிலையில், அதன் சேவையை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்க வழி காண முடியும் என்ற நோக்கில் அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
 12 இடங்களில் தொடங்கப்பட்ட சேவை: தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி சேலம் தலைமை அஞ்சல் நிலையத்திலும், மார்ச் 25-இல் வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்திலும் இம்மையங்கள் தொடங்கப்பட்டன. காரைக்காலில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் இச்சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து அடுத்த கட்டமாக திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர், நாகர்கோவில், கடலூரில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் மையங்கள் திறக்கப்பட்டன. இதுதவிர தமிழக வட்டத்தில், பெரம்பலூர், தேவகோட்டை, கொடைரோடு, ராசிபுரம் ஆகிய 4 அஞ்சல்நிலையங்களிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுகின்றன.
 5 இடங்களில் விரிவாக்கம்: இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 5 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து கோரப்பட்டுள்ளதை அடுத்து, அரக்கோணம், வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆரணி ஆகிய 5 இடங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
 இதுகுறித்து அஞ்சல் துறை சென்னை மண்டலத் தலைவர் ஆர். ஆனந்த் கூறியது: அகில இந்திய அளவில் மொத்தம் 214 அஞ்சல்நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை அளிக்கப்படுகிறது. இச்சேவையை 491 அஞ்சல் நிலையங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 12 இடங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது. கூடுதலாக மேலும் 5 இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் வேண்டும் என்று பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
 அதன் அடிப்படையில், அரக்கோணம், வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆரணி ஆகிய இடங்களில் சேவை மையம் அமைப்பது தொடர்பாக அஞ்சல் துறை சார்பில், ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். வெளியுறவுத் துறை மற்றும் அஞ்சல்துறை இணைந்து இந்த அஞ்சல் நிலையங்களில் சேவை மையம் அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்கும். இந்த மையங்கள் 6 மாதம் முதல் ஓர் ஆண்டு கால அவகாசத்துக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.
 அளிக்கப்படும் சேவை: பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்யும்போது, குறிப்பிட்ட ஆவணங்களின் அசலை கொண்டு சரிபார்த்தல், கணினியில் பரிசோதித்து சந்தேகத்தை தெளிவுபடுத்தல், புகைப்படம், கைரேகை பதிவு செய்தல் ஆகிய பணிகள் முடிந்தபிறகு, "சரி' என்று குறிப்பிடப்படும். அதன்பிறகு, ஒரு வரைவு கிடைக்கும். அதை மண்டல பாஸ்போர்ட் அலுவலக மேற்பார்வையாளர் பார்வையிடுவார். அதன்பின்னர் அவர் ஒப்புதல் அளிப்பார். இப்பணிகள் அஞ்சல் நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் மையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. சராசரியாக நாள்தோறும் ஒரு மையத்தில் 50 முதல் 75 பாஸ்போர்ட் செயல்முறைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 இதற்காக பாஸ்போர்ட் சேவை மையம் உள்ள அஞ்சல் நிலையத்தில் 5 ஊழியர்கள் பயிற்சி பெற்று இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேற்பார்வையாளர் பொறுப்பில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி இருப்பார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.