ஆய்வகப் பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை அனுப்ப தானியங்கி முறை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறிமுகம்

நோயாளிகளின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைகளுக்கு அனுப்புவதற்கு அதி நவீன தானியங்கி கட்டமைப்பை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உருவாக்கியுள்ளது.
ரத்தம், சிறுநீர் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்புவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டமைப்பு.
ரத்தம், சிறுநீர் மாதிரிகளை ஆய்வகத்துக்கு அனுப்புவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தானியங்கி கட்டமைப்பு.
Updated on
2 min read



நோயாளிகளின் ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைகளுக்கு அனுப்புவதற்கு அதி நவீன தானியங்கி கட்டமைப்பை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உருவாக்கியுள்ளது.
ஜெர்மனி நாட்டுத் தொழில்நுட்பத்தில் அவை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், மாநிலத்தில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இதுபோன்ற வசதிகள் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த தானியங்கி முறையால் தேவையற்ற நேர விரயம் தவிர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆய்வகப் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்வதற்கும் இந்த தொழில்நுட்பம் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிகிறது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான புற நோயாளிகளும், 1,000 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். தேவைப்படும்பட்சத்தில் அவர்களது ரத்தம், சிறுநீர், மலம், திசு உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நோய்களைக் கண்டறிவதற்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகின்றன.
அவ்வாறு நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக சம்பந்தப்பட்ட வார்டுகளின் செவிலியர்களோ அல்லது மருத்துவ உதவியாளர்களோதான் அந்த மாதிரிகளைச் சேகரித்து வந்து ஆய்வகத்தில் கொடுப்பார்கள். பல ஏக்கர் பரப்பளவு கொண்ட மருத்துவமனையில் வெவ்வேறு பகுதிகளில் வார்டுகள் செயல்படுவதால் அங்கிருந்து ஆய்வகத்துக்கு மாதிரிகளை கொண்டு வருவதற்கே குறைந்தது 15 நிமிஷங்களாகிவிடும் எனக் கூறப்படுகிறது. இந்த கால தாமதத்தைத் தவிர்க்கும் விதமாக சம்பந்தப்பட்ட வார்டுகளில் இருந்து தானியங்கி குழாய்கள் வழியாக நேரடியாக ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்பும் நவீன கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.10 லட்சம் மதிப்பில்  ஜெர்மனி நாட்டிலிருந்து நவீன சாதனங்கள்  கொள்முதல் செய்யப்பட்டன.  முதல்கட்டமாக பச்சிளம் குழந்தைகள் வார்டிலும், தாய் அவசரச்  சிகிச்சைப் பிரிவிலும் இந்த தானியங்கி கட்டமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. 
மாதிரிகள் செல்லும் குழாய்களில் மோட்டார் மூலம் காற்றழுத்தம் செலுத்தப்படும். இயற்பியல் எதிர் வினையில் அது ஒரு பொருளை உள் ஈர்க்கும் விசையாக மாறும். இதன் மூலம் தாமாகவே ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு குறிப்பிட்ட பொருளைக் கடத்த முடியும். தாய் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து ஒரு ரத்த மாதிரியை நேரடியாகச் சென்று ஆய்வகத்தில் கொடுக்க வேண்டுமானால் குறைந்தது 10 நிமிஷங்களாவது ஆகும். ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தின்படி ஒரு நிமிஷத்துக்குள் ரத்த மாதிரியை தானியங்கி முறையில் கொண்டு சேர்த்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் கமலரத்னம் ஆகியோர் கூறியதாவது:
தானியங்கி தொழில்நுட்பத்தில் மாதிரிகளை எடுத்துச் செல்வதால் ஆய்வகத்துக்கும், சம்பந்தப்பட்ட வார்டுகளுக்கும் இடையே நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ எந்த தொடர்பும் மேற்கொள்ளத் தேவையில்லை.
மாறாக, அதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு மென்பொருள் மற்றும் பார் கோடு வசதிகள் மூலமாக நோயாளியின் தகவல்கள் ஆய்வகத்துக்கு தாமாகவே சென்றுவிடும். அதேபோன்று, பரிசோதனை முடிவுகள் கணினியில் பதிவேற்றப்பட்டு விடும். இதன் மூலம், உரிய சிகிச்சையை விரைந்து அளிக்க முடியும் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com