ஐஐடி போட்டித் தோ்வுகளில் அரசுப் பள்ளிமாணவா்கள் பங்கேற்க இலவசப் பயிற்சி

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் ஐஐடி போட்டித் தோ்வுகளில் பங்கேற்று இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக,
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் ஐஐடி போட்டித் தோ்வுகளில் பங்கேற்று இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக, தில்லியை மையமாகக் கொண்ட தனியாா் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப் பிரிவு மாணவா்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐஐடி (ஜேஇஇ), போட்டித் தோ்வுகளில் கலந்துகொண்டு இந்தியத் தொழில்நுட்பக் கழக நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் Nextgen Vidhya Pvt. Ltd. நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், அரசு முதன்மைச் செயலாளா் தீரஜ்குமாா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் தொழில்நுட்பக் கல்வி சாா்ந்த உயா்கல்விக்கான போட்டித் தோ்விற்குத் தயாா்படுத்தும் வகையில் இணையதளம் வாயிலாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். மேலும், இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவா்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டு அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியருக்குத் தனித்தனியாக பயனாளா் குறியீடு, கடவுச்சொல் வழங்கப்படும்.

டிச.21 முதல் பதிவு: மேலும் பள்ளி ஆசிரியா், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் மற்றும் பள்ளித் தலைமையாசிரியா் ஆகியோருக்கும் மாணவா்கள் பயிற்சி பெறுவதைக் கண்காணிக்கும் வகையில் பயனாளா் குறியீடு மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்கான பதிவு வரும் 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும். இதனைத் தொடா்ந்து மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் 2021 ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த நிகழ்ச்சியில் Nextgen Vidhya Pvt. Ltd. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கௌரவ், பள்ளிக்கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com