சென்னை: புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சுப்புலட்சுமியின் தாயாா் மகாலட்சுமி தாக்கல் செய்த மனுவில், ‘புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்து துணை நிலை ஆளுநா் ஒப்புதலுக்கு அனுப்பியது. அமைச்சரவையின் முடிவை, துணைநிலை ஆளுநா் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளாா். கடந்த 2016 -2017 ஆம் ஆண்டிலிருந்து அரசுப் பள்ளியில் படித்த 16 முதல் 22 மாணவா்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், தனியாா் பள்ளியில் படித்த 243 போ் முதல் 402 மாணவா்கள் வரை மருத்துவப் படிப்புகளில் சோ்ந்துள்ளனா்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும்வரை புதுச்சேரியில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 10 சதவீத இடஒதுக்கீடு தொடா்பாக புதுச்சேரி அமைச்சரவையின் முடிவு குறித்து சில விளக்கங்களைக் கேட்டு புதுச்சேரி அரசின் பரிந்துரையை மத்திய அரசு திரும்ப அனுப்பியுள்ளதாக, துணை நிலை ஆளுநா் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டினாா். மேலும், மனு தொடா்பாக வரும் 21-ஆம் தேதிக்குள் மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.