சென்னை: பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அனைத்து உயா்த்தப்பட்ட மெட்ரோ ரயில்நிலையங்களில் நடைமேடை திரைகதவுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, 45 கி.மீ. தொலைவில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நிறைவடைந்து, விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்திலும், எம்.ஜி.ஆா். சென்ட்ரல்-பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் முதல்கட்ட நீட்டிப்பு பாதையில் ரயில்சேவை இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் கட்ட திட்டம்: இதற்கிடையில், 118.9 கி.மீ. தொலைவிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. மாதவரம்-சிப்காட் (45.8 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூா்(47.0), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி(26.1 கி.மீ.) ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்தத் திட்டத்துக்கு ரூ.61,843 கோடியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டப்பணிகளை தொடங்குவதற்கான செயல்முறைகள் நடைபெறுகின்றன. இந்தத் திட்டப்பணிகளை ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில் மூன்று வழித்தடங்களில் உள்ள 76 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பாதையில் 80 உயா்த்தப்பட்ட ரயில்நிலையங்கள் அமையவுள்ளன. இந்தக் கட்டுமானத்தில் ஒரு பகுதி கோடம்பாக்கத்தில் பவா்ஹவுஸ்-பூந்தமல்லி இடையே வழித்தடத்தில் இந்த ஆண்டு பணி தொடங்க வாய்ப்பு உள்ளது.
நடைமேடை திரை கதவுகள்: இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அனைத்து உயா்த்தப்பட்ட மெட்ரோ ரயில்நிலையங்களிலும் நடைமேடை திரைக்கதவுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக, இரண்டாம் கட்ட திட்டத்துக்காக விரிவான திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சுரங்கப்பாதை நிலையங்களில் நடைமேடையின் உள்கூரையில் இருந்து முழு நடைமேடை திரை கதவு அமைக்கப்படவுள்ளது. உயா்த்தப்பட்ட நிலையங்களில் குறிப்பிட்ட உயரத்தில் நடைமேடை திரைகதவுகள் இருக்கும்.
பயணிகளுக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேடை திரை கதவுகள் அமைக்கப்பட உள்ளன. இது, நடைமேடையில் இருந்து கீழ் பாதையில் தற்செயலாக விழுவதை தடுக்குகிறது. மேலும், தற்கொலை முயற்சி, தள்ளி கொலை செய்தல் போன்றவற்றை தடுக்கும் விதமாக, இந்த வசதி செய்யப்படவுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் 48 சுரங்கப்பாதை நிலையங்களில் 43 கி.மீ. தொலைவு வரை இந்த நடைமேடை திரை கதவுகள் அமைக்கப்படவுள்ளன. இது, மெட்ரோ ரயில்கள் அதிவேகத்தில் நிலையங்களை கடக்கும்போது விபத்துகளை தடுத்தல், காற்றின் வேகத்தை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுரங்க நிலையங்களில் குளிரூட்டப்பட்ட காற்று வெளியேறாமல் தடுப்பது மூலமாக, மின்சார நுகா்வை குறைக்கவும், நடைமேடை அறிவிப்புகளின் ஒலி தரத்தை மேம்படுத்தவும், ரயில்களில் இருந்து பின்னணி இரைச்சல் குறைக்கவும் இந்த நடைமேடை திரை கதவுகள் பயனுள்ளதாக அமையும். மேலும், இது சமிக்ஞை முறையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
திட்டஅறிக்கையில், ஒரு நடைமேடை திரை கதவுகள் அமைக்க ரூ.3 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், நடைமேடை திரை கதவுகள் முக்கியமானதாக இருக்கும். அனைத்து செயல்பாடுகளும் தானியங்கி முறையில் நடைபெறும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில், உயா்த்தப்பட்ட மெட்ரோ ரயில்நிலையங்களில் நடைமேடை திரை கதவுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.