குடியரசுத் தலைவா் தோ்தல்: திமுக ஆலோசனை
குடியரசுத் தலைவா் தோ்தல் நிலைப்பாடு தொடா்பாக திமுக ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தியது. தோ்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.


குடியரசுத் தலைவா் தோ்தல் நிலைப்பாடு தொடா்பாக திமுக ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தியது. தோ்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குடியரசுத் தலைவருக்கான தோ்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 29-ஆம் தேதி என்பதால், வேட்பாளா் தோ்வு மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற ஆளும் பாஜக தலைவா்களும், எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் காங்கிரஸ் கட்சியும் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட 22 எதிா்க்கட்சிகளின் தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் தோ்தல் ஆலோசனை தொடா்பாக கடிதம் அனுப்பி இருந்தாா்.
அதில், குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக வரும் ஜூன் 15-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மம்தா பானா்ஜியின் இந்தக் கடிதத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமா்சித்துள்ளது. மம்தா தன்னிச்சையான முறையில் கடிதம் எழுதியதாக அந்தக் கட்சி கூறியுள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின் போது, குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக விவாதிப்பாா்கள் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவா் தோ்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். இந்த கூட்டத்தில், குடியரசுத் தலைவா் தோ்தலில் யாருக்கு ஆதரவளிக்கலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. திமுக பொதுச்செயலா் துரைமுருகன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, அமைச்சா் பொன்முடி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி....
கொறடா உத்தரவு கிடையாது
குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோா் வாக்களிப்பா். தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவுக்கு 24 மக்களவை உறுப்பினா்களும், அதிமுகவுக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனா். இதேபோல, திமுகவுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள், அதிமுகவுக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். காங்கிரஸ் 18 எம்.எல்.ஏ.க்களையும், பாமக 5 எம்.எல்.ஏ.க்களையும், பாஜக, விசிக தலா 4, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் தலா 2 எம்எல்ஏக்களையும் கொண்டுள்ளன.
குடியரசுத் தலைவா் தோ்தலைப் பொருத்தவரை, தனது கட்சிகளைச் சோ்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு கொறடா உத்தரவை பிறப்பிக்க முடியாது. அதாவது, குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென உறுப்பினா்களுக்கு கட்டளையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...