அம்பத்தூரில் ரெளடி கடத்தி வெட்டிக்கொலை: 9 பேர் கைது

அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்று ரெளடியை வெட்டிக் கொலை செய்த 9 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
உதயகுமார்
உதயகுமார்

ஆவடி: அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்று ரெளடியை வெட்டிக் கொலை செய்த 9 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அம்பத்தூர், சண்முகபுரம், அன்னை இந்திரா நகர், கோரை தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(25). இவர் அம்பத்தூர் காவல் நிலைய  பதிவேட்டில் ரெளடியாக இடம் பெற்று உள்ளார். இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டாகிறது. 7 மாதத்தில் கவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. உதயகுமார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, பாரதியார் நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து வந்தார். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் உதயகுமார் தனது தாய் லதாவை பார்க்க சண்முகபுரம் வந்துள்ளார். அப்போது அவரை சிலர் பைக்கில் கடத்திச் சென்றதை, அவரது நண்பர் அஜித் என்பவர் லதாவிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இரவு லதா அம்பத்தூர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் மூலமாக தீவிர விசாரணை நடத்தியதில் உதயகுமாரை சிலர் கடத்திச் சென்று அதே பகுதி சிவப்பிரகாசம் நகர், தாமரைகுளம் அருகே முட்புதரில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து இருந்தது தெரியவந்தது. 

பின்னர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில்,  உதயகுமாரின் நண்பர் ஜீவா (26) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த மோசஸ், லாரன்ஸ், எலியா சாமுவேல் ஆகியோர் கடந்த மாதம் 18ஆம் தேதி தாக்கியுள்ளனர். 

இதனை அறிந்த உதயகுமார் மோசஸ் வீட்டுக்குச் சென்று அவரது தாயார் ராஜலட்சுமியிடம் தட்டிக் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மோசஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயகுமாரை கடத்திச் சென்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து தலைமறைவாக இருந்த சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த அப்புன் என்ற பூவராகவன்(36), சரண் (20), ராமமூர்த்தி (22), மாரிஸ் (20), பிராங்கிளின்(23), முகுந்தன் (20), எலியா சாமுவேல் (20) மாணிக்கம் (24), வினோத்குமார் (40) ஆகிய 9 பேர்களை காவல்துறையினர் சனிக்கிழமை மாலை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக மோசஸ், எலியாஸ், லாரன்ஸ் ஆகிய மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com