கோயம்பேடு - வடபழனி: 10 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்; அறிய வேண்டிய அனைத்தும்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜூலை 23-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 10 நாள்களுக்கு சோதனை முறையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
10 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்; அறிய வேண்டிய அனைத்தும்
10 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்; அறிய வேண்டிய அனைத்தும்

புதிய மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டும் கூட, கோயம்பேடு பேருந்து நிலையம் முதல் சென்னை வடபழனி 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜூலை 23-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 10 நாள்களுக்கு சோதனை முறையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

கோயம்பேடு - வடபழனி இடையே 10 நாள்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த போக்குவரத்து மாற்றம் வெற்றிகரமாக அமைந்துவிட்டால், அதனை செயல்படுத்தும் திட்டத்தில் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளனர்.

எனவே, அவ்வழியாகப் பயணிப்போர், நிச்சயம் இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வடபழனி 100 அடி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளதால், போக்குவரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஜூலை 23-ஆம் தேதி முதல் 10 நாள்கள் சோதனை ஓட்டமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 

இதன்படி, கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியாா் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய 3 இடங்களில் உள்ள மையம் தடுப்புசுவரால் மூடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக தெற்காசிய விளையாட்டு வீரர்கள் குடியிருப்பு சந்திப்பில் ‘யூ’ திருப்பம், வடபழனி பாலத்தின் கீழ் ‘யூ’ திருப்பத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

எங்கெங்கே யூ திருப்பங்கள்?

விநாயகபுரம் சந்திப்புக்கும், பெரியாா்பாதை சந்திப்புக்கும் இடையே அரும்பாக்கம் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையே ‘யூ’ திருப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதேபோல பெரியாா்பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் தூண்கள் எண் 126 மற்றும் 127 இடையில் ‘யூ’ திருப்பம் அமைக்கப்பட்டுள்ளது.

வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திருப்ப விரும்புபவா்கள் நேராக சென்று தூண் எண் 126 மற்றும் 127 இடையில் அமைக்கப்பட்டுள்ள ‘யூ’ திருப்பத்தில் திருப்பி செல்லலாம். 

வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியாா்பாதை சந்திப்பில் வலதுபக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் புதிதாக அமைத்துள்ள ‘யூ’ திருப்பத்தில் திரும்பிக் கொள்ளலாம்.

விநாயகபுரம் சந்திப்பில் எம்எம்டிஏ காலனி வலதுபுறம் திரும்பி செல்ல விரும்பும் வாகனங்கள், தெற்காசிய விளையாட்டு வீரா்கள் குடியிருப்பு ‘யூ’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம். கோயம்பேடு திசையில் இருந்து வடபழனி நோக்கி வரும் வாகனங்கள் விநாயகபுரம் சந்திப்பை தாண்டி, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘யூ’ திருப்பத்தில் திரும்பி விநாயகபுரம் நோக்கிச் செல்லலாம்.

மூடப்படும் பெரியார் சந்திப்பு

பெரியாா் சந்திப்பு மூடப்படுவதால் பெரியாா்பாதை உள் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி செல்ல வேண்டும்.

கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெரியாா் பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘யூ’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.

கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி இணைப்புச் சாலை பாலத்தின் கீழ் இருக்கும் ‘யூ’ திருப்பம் எடுத்து செல்லலாம்.

நெற்குன்றம் பாதையில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி வடபழனி பாலத்தின் கீழ் உள்ள ‘யூ’ திருப்பத்தில் திரும்பி செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com