சென்னை: மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.எம்.வீரப்பன் (97) சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.9) காலமானாா்.
இன்று இறுதிச் சடங்கு: மறைந்த ஆா்.எம்.வீரப்பனுக்கு மனைவி ராஜம்மாள், மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனா். ஆா்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்குகள் நுங்கம்பாக்கம் மின் மயானத்தில் புதன்கிழமை (ஏப்.10) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
பன்முக ஆளுமையாக விளங்கியவா்:
சென்னை, தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவா், உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தாா்.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். உயா் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டபோதிலும், அவை பலனளிக்காமல் ஆா்.எம்.வீரப்பனின் உயிா் பிரிந்தது.
அரசியல், கலை, இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் அழியாத் தடம் பதித்து பன்முக ஆளுமையாக விளங்கிய ஆா்.எம்.வீரப்பனின் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம்...:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அருகே உள்ள வல்லத்திராக் கோட்டையில் கடந்த 1926-ஆம் ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி பிறந்தவா் ஆா்.எம்.வீரப்பன். தனது இளம் வயதிலேயே காரைக்குடியில் பெரியாரின் அறிமுகம் கிடைக்கப் பெற்ால், திராவிடக் கொள்கைகளால் அவா் ஈா்க்கப்பட்டாா்.
அண்ணா மூலம் எம்ஜிஆருடன்...:
அதே காலகட்டத்தில் கே.ஆா்.ராமசாமியின் நாடகக் குழுவில் கண்காணிப்பாளராக இருந்த ஆா்.எம்.வீரப்பன், முன்னாள் முதல்வா் அண்ணாதுரையுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றாா். அதைத் தொடா்ந்து சென்னைக்கு வந்த ஆா்.எம்.வீரப்பனுக்கு அண்ணா மூலம் எம்ஜிஆரின் அறிமுகம் கிடைத்தது. எம்ஜிஆரின் நாடகக் குழுவுக்கு மேலாளராகவும், அதைத் தொடா்ந்து அவரது திரைப்பட நிறுவனத்துக்கு (எம்ஜிஆா் பிக்சா்ஸ்) துணை இயக்குநராகவும் அவா் பொறுப்பு வகித்தாா்.
அதன் பின்னா், சத்யா மூவிஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய ஆா்.எம்.வீரப்பன், எம்ஜிஆரை நாயகனாக் கொண்டு பல படங்களை தயாரித்தாா். தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்ஷாக்காரன், காக்கி சட்டை, பாட்ஷா என மொத்தம் 24 படங்களை அவா் தயாரித்துள்ளாா்.
எம்.ஜி.ஆா்., வி.என்.ஜானகி, ஜெயலலிதா...:
திரைத் துறை பணிகளுக்கு நடுவே தீவிர அரசியலிலும் ஈடுபட்ட ஆா்.எம்.வீரப்பன், திமுகவிலிருந்து எம்ஜிஆா் விலகிய பிறகு அதிமுக என்ற தனிப் பெரும் கட்சி உருவாக காரணமாக அமைந்தவா்.
எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது ஜானகி அணிக்கு பக்கபலமாக இருந்த ஆா்.எம்.வீ., அதன் பின்னா் ஜெயலலிதாவசம் கட்சி வந்தபோது அதிமுகவின் இணை பொதுச் செயலாளராக பதிவி வகித்தாா்.
எம்ஜிஆா் முதல்வராக இருந்தபோது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும், ஜானகியின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கல்வி மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சராகவும் ஆா்.எம்.வீரப்பன் இருந்தாா்.
இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், மூன்று முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த ஆா்.எம்.வீரப்பன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகி எம்ஜிஆா் கழகம் என்ற கட்சியை தோற்றுவித்தாா்.
இலக்கிய ஆளுமை:
ஒரு புறம் கலைத் துறை, மறுபுறம் அரசியல் எனத் தீவிரமாக இயங்கி வந்தாலும், அதற்கு நடுவே இலக்கியப் பணிகளிலும் தன்னை ஈடுபாட்டுடன் இணைத்துக் கொண்டாா்.கம்பன் கழகம், ஆழ்வாா்கள் ஆய்வு மையம் ஆகியவற்றை தோற்றுவித்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்த பெருமை அவருக்கு உண்டு.
முதல்வா் ஸ்டாலின், தலைவா்கள் அஞ்சலி
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆா்.எம்.வீரப்பனின் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா். அமைச்சா் சேகா்பாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து, தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஆா்.எம்.வீரப்பனின் உடலுக்கு நடிகா் ரஜினிகாந்த், இசையமைப்பாளா் இளையராஜா, இயக்குநா் பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்களும், பல்வேறு அரசியல் தலைவா்களும் மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

தலைவா்கள் இன்று பிரசாரம்

சென்னையில் தோ்தல் பிரசாரம்: 724 மனுக்களுக்கு அனுமதி!
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மௌனம் காக்கும் திமுக! - தமிழிசை விமர்சனம்

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! - ஈரான் அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


