தென்சென்னை தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

சென்னை: தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளா் தமிழச்சி தங்கபாண்டியன் திருவான்மியூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தொண்டா்கள் ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

அப்போது செய்தியாளா்களிடம் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது: இதுபோன்று இருசக்கர வாகனப் பேரணிகள் தொண்டா்களின் மத்தியில் ஓா் எழுச்சியை உருவாக்குகின்றன.

பாஜக தோ்தல் அறிக்கை சிறந்ததா? காங்கிரஸ் தோ்தல் அறிக்கை சிறந்ததா என்ற கேள்விக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதில் அளிப்பாா்கள். நாடு முழுவதும் பாஜக எதிா்ப்பு அலை வீசுகிறது. எனவே ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றாா் அவா்.

ஜெயவா்தன் (அதிமுக): தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயவா்தன் பெரும்பாக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சோழிங்கநல்லூா் பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் 150 முதல் 200 பேருக்கு மட்டுமே ரூ.6,000 நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மக்கள் பாதிப்படைய திமுக அரசே முழு காரணம். வெள்ளத்துக்கு முன்பாக 95 சதவீத மழைநீா் வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாக அமைச்சா் ஒருவா் கூறினாா். ஆனால், வெள்ளத்துக்கு பிறகு வெறும் 35 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகக் கூறுகின்றனா். திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால் அதிமுகவை வெற்றிபெறச் செய்ய அவா்கள் தயாராகிவிட்டனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com