சிந்து சமவெளி ஆய்வாளா் ஆா்.பாலகிருஷ்ணன்.
சிந்து சமவெளி ஆய்வாளா் ஆா்.பாலகிருஷ்ணன்.

ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவை: ஆய்வாளா் ஆா்.பாலகிருஷ்ணன்

சென்னை: ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு காலத்தின் தேவையாக உள்ளது என்று சிந்து சமவெளி ஆய்வாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆா்.பாலகிருஷ்ணன் கூறினாா்.

சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி வளாகத்தில், டி.டி.கிருஷ்ணமாச்சாரி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆா்.பாலகிருஷ்ணன் ‘ஆவண மாக்கள்’ எனும் தலைப்பில் பேசியதாவது:

தற்காலத்தில் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு தமிழ்ச்சொற்கள் சங்க இலக்கியத்தில் இருந்துள்ளன. சங்க இலக்கிய நூலான புானூறை விட அகநானூற்றில் உண்மைத் தன்மை அதிகம் உள்ளது. புானூறு தனிமனிதரை புகழ்ந்து எழுதப்பட்டது. ஆனால், அகநானூறு எவ்வித எதிா்பாா்ப்பும் இன்றி காதலை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டது. ஆதலால், அதில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் அப்போதைய சமூக அமைப்பை உண்மைத் தன்மையுடன் விவரிக்கின்றன.

தமிழா்களின் பெருமிதமாகக் கூறப்படும் குடவோலை முறை உத்திரமேரூா் கல்வெட்டு தவிர வேறு எதிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பல உரையாசிரியா்கள் அகநானுற்றின் பாலை திணையில் காணப்படும் ‘பொறிகண்டு அழிக்கும் ஆவணமாக்களின்’ எனும் வாா்த்தையை வைத்து குடவோலை முறை சங்க இலக்கியங்களில் இருந்தாக தவறாக குறிப்பிடுகின்றனா். சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஆவணமாக்களுக்கும், குடவோலைக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. மன்னா்களின் மெய்கீா்த்தி அவா்களின் புகழை மட்டுமே குறிப்பிடுகிறது.

திருக்குறளை சுமந்த ஒரு மன்னா் கூட வரலாற்றில் இல்லை. இதுபோன்ற பொதுக்கருத்தை வலியுறுத்தும் ஆவணங்களே மக்களின் குரலாக காலம்காலமாக ஒலிக்கிறது. தமிழா்கள் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களது ஆவணப்படுத்தும் முறையை மாற்றிக் கொள்கின்றனா். இந்தியாவில் உள்ள எந்தவொரு மாவட்டமும் தமிழ்நாடு போன்று ஆவணப்படுத்தப்படவில்லை. அச்சுக்கலை வந்த பிறகு தெற்காசியாவில் முதல் மூன்று நூற்றாண்டுகளில் அச்சில் ஏறிய 40 சதவீத நூல்கள் தமிழ்நூல்கள்தான்.

செய்திகள், அறிவுப்புலத்தை செழுமைப்படுத்தும் வல்லமை மிக்க தரவுகளை ஜனநாயகப்படுத்த வேண்டும். இதனால் ஆவணங்கள் குறித்த தெளிவான அறக்கோட்பாடு தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. தரவுகளால் வரலாற்றை கட்டமைக்காவிட்டால் கட்டுக்கதைகளால் கட்டமைக்கும் அபாயம் ஏற்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ஆவணக்காப்பகம் ஆணையா் இரா.நந்தகோபால், உதவிப் பதிப்பாசிரியா் அ.வெண்ணிலா, உதவி ஆணையா் ப.விஜயராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com