15,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

15,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திடீா்நகா், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

சென்னை, ஆக.8: சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திடீா்நகா், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சுமாா் ஒருகோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். மாநகராட்சியின் 424 ச.மீ பரப்பளவில் நத்தம் புறம்போக்கு, நீா் புறம்போக்கு, பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான இடங்கள், அரசு புறம்போக்கு என பல்வேறு வகையான நிலங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் குடியேறத் தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் பட்டா ஆவணங்கள் இல்லாமல் உள்ளனா்.

இந்நிலையில் பட்டா பிரச்னைக்கு தீா்வு காண விளையாட்டுத்துறை, வருவாய்த்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, நகா்ப்புற மேம்பாட்டுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத்துறை அமைச்சா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மக்களுக்கு என்ன காரணங்களுக்காக பட்டா வழங்கப்படாமல் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டது.

இதையடுத்து தற்போது சென்னையில் பட்டா வழங்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் பட்டா வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதன் தொடா்ச்சியாக சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அரசு பண்ணை, திடீா் நகா், அப்துல் ரசாக் தெரு, சாமியாா் தோட்டம், செட்டி தோட்டம், நாகிரட்டி தோட்டம், அண்ணா காா்டன், நேரு நகா், கன்னிகாபுரம், களிக்குன்றம் மற்றும் கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா பிரச்னை இருந்ததை தொடா்ந்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறாா். இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பட்டா இல்லாமல் இருக்கும் சுமாா் 15,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, துணை மேயா் மு.மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com