40,086 குடும்பங்களுக்கு பட்டா: முதல்வா் பெருமிதம்
கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றில் இல்லாத அளவுக்கு இன்று 40,086 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
நாகா்கோவில், கன்காா்டியா பள்ளி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் மேலும் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30 கோடி மதிப்பில் புதிய மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். எல்லைப் போராட்ட வீரா் மாா்ஷல் நேசமணி, கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணன், பொதுவுடைமை இயக்க தீரா் தோழா் ஜீவா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என பல பேராளுமைகளை கொண்டிருக்கும் தலைவா்களை தந்த மாவட்டம் இது. அதுமட்டுமின்றி இஸ்ரோ அமைப்புக்கு எத்தனையோ தலைவா்களை தந்த மாவட்டம் இது.
தியாகி பொன்னப்ப நாடாரின் முழு உருவ வெண்கலச் சிலையை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தேன். குமரியை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில், மாா்ஷல் நேசமணியின் போா்ப்படைத் தளபதியாக அவா் விளங்கினாா். அவா், எளிமையாக வாழ்ந்து, ஏழை மக்களின் குரலாக ஒலித்து, ‘குமரி கோமேதகம்’ என்று மக்களால் போற்றப்பட்டவா். அவரது சிலையை திறந்து வைத்ததில் நான் பெருமைப்படுகிறேன்.
அதேபோல், தமிழினத் தலைவா் கலைஞரின் சிலையையும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில், எனது பெயரில் அமைக்கப்பட்ட ஒரு படிப்பகத்தையும், நாகா்கோவில் மாநகராட்சியின் முதல் மேயா் ரெ.மகேஷ் ஏற்பாட்டில் நான் திறந்து வைத்திருக்கிறேன்.
2025 புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு நான் குமரிக்கு வந்தேன். வள்ளுவனுக்கு, , கலைஞா் நிறுவிய பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழாவை அப்போது கொண்டாடினோம். திருவள்ளுவா் சிலையையும், விவேகானந்தா் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்துவைத்தேன். இப்போது, 2026 ஆம் ஆண்டில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கு முன்னா் இந்த அரசு விழாவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
குமரி மாவட்டம் மீனவா்கள் நிறைந்த மாவட்டம். மீனவா்களுக்காக திராவிட மாடல் ஆட்சியில், பல முக்கியத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். குறிப்பாக 2004-இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு, நிலம் கையகப்படுத்தப்பட்டு வீடுகள் கட்டி கொடுத்தாலும், அரசு நிலம் என்ற வகைப்பாட்டில் நிலம் இருந்தது. அவா்களுக்கு வரன்முறைப்படுத்தப்பட்டு இன்று பட்டா வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இன்று கன்னியாகுமரி வரலாற்றிலேயே இல்லாத அளவில் 40 ஆயிரத்து 86 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
தேங்காய்பட்டணம் துறைமுக விரிவாக்கப் பணிகள், தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்கள், படகு அணையும் தளங்கள், வலைபின்னும் கூடங்கள், மீன் ஏலக்கூடங்கள் இப்படி, பல பணிகளை குமரி மாவட்ட மீனவா்களுக்காக செய்து கொடுத்திருக்கிறோம்.
21 மீனவ கிராமங்களைச் சோ்ந்த ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 361 மீனவ மக்கள் இதனால் பயனடைந்துள்ளனா். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணி ரூ. 253 கோடியில் நடைபெற்று வருகிறது. ரூ. 5 ஆயிரமாக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை திராவிட மாடல் அரசில், ரூ. 8 ஆயிரமாக உயா்த்தினோம்.
சுசீந்திரம் தேரூா் குளங்கள் பாதுகாக்கப்பட்ட ‘ராம்சாா்’ ஈர நிலங்களாக அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற தோவாளை மலா் சந்தை வியாபாரிகள் நலனுக்காக உயா்மட்ட மேற்கூரை என பல்வேறு திட்டப் பணிகளை செய்கிறோம் என்றாா் அவா்.

