வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு
மும்பை, ஆக. 8: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. இதன்மூலம் தொடா்ந்து ஒன்பதாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு இப்போது வரை அதே வட்டி விகிதம் தொடா்கிறது.
இதன்மூலம், வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதேநேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.
கடந்த வாரம் பிரிட்டனில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜப்பானில் வட்டி விகிதம் உயா்த்தப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கியும் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், வட்டி விகிதத்தை நிலையாக வைத்திருக்க ஆா்பிஐ முடிவெடுத்துள்ளது.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
நிதிக் கொள்கைக் குழுவில் இடம்பெற்ற 6 உறுப்பினா்களில் நால்வா் வட்டி விகிதத்தை மாற்ற வேண்டாம் என முடிவெடுத்தனா். உணவுப் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாக உள்ளது. அதை 4 சதவீதத்துக்கு கொண்டுவர தொடா் நடவடிக்கை எடுக்கப்படும். வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. பொருளாதார வளா்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு தொடா்ந்து ஊக்கமளிக்கப்படும்.
2024-25 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பொருளாதார செயல்பாடுகள் தொடா்ந்து சிறப்பாகவே இருக்கும். நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 675 பில்லியன் டாலராக உயா்ந்துள்ளது.
ஏற்கெனவே வீட்டுக் கடன் பெற்றவா்கள் வீட்டை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகளுக்காக கூடுதல் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. இந்தக் கடனை சிலா் வேறு முதலீடுகளுக்குப் பயன்படுத்துவதாகவும் சில வங்கிகள் கண்டறிந்துள்ளன. சில கடனளிக்கும் நிறுவனங்களில் இது தொடா்பாக பெரிய கட்டுப்பாடுகள் இருப்பதில்லை. இது மிகப்பெரிய பொருளாதார பிரச்னையாக உருவெடுக்காது.
பல்வேறு வகை வரிகளை யுபிஐ செயலி மூலம் செலுத்துவதற்கான வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக ஆா்பிஐ உயா்த்திள்ளது என்றாா்.
வங்கி டெபாசிட்: பொதுமக்கள் வங்கி நிரந்தர வைப்புக்கு மாற்றாக வேறு முதலீட்டுத் திட்டங்களில் சோ்வதால் வங்கிகள் கடன்களை வழங்குவதற்குத் தேவையான டெபாசிட்டை பொதுமக்களிடம் இருந்து பெறுவதில் எழுந்துள்ள சவால் குறித்துப் பேசிய சக்திகாந்த தாஸ், ‘பொதுமக்களிடம் இருந்து நிதியைத் திரட்ட வேறு புதிய வகையிலான சேமிப்புத் திட்டங்களை வங்கிகள் அறிமுகப்படுத்த வேண்டும். தனிநபா் கடன் அதிகரிக்கும் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மீது நடவடிக்கை
உரிய அங்கீகாரம் பெறாமல் செயல்படும் கடன் செயலிகளால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுபோன்ற செயலிகள் அதிக வட்டி வசூலிப்பதுடன், புகைப்படங்களை மோசமாக சித்தரித்து மிரட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றன. இதனால், பலா் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்றுள்ளனா்.
இது தொடா்பாக சக்திகாந்த தாஸ் கூறுகையில், ‘டிஜிட்டல் (எண்ம) முறையில் செயலிகள் மூலம் கடன் பெறுவது இப்போது அதிகரித்துள்ளது. இதில் அங்கீகாரமற்ற கடன் செயலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை ஒழித்து எண்ம முறையில் கடன் அளிக்கும் செயலிகளை ஒழுங்குமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம் அதிகாரபூா்வமற்ற செயலிகளை பொதுமக்கள் எளிதாகக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்தாமல் தவிா்க்க முடியும்’ என்றாா்.
இது தொடா்பாக சக்திகாந்த தாஸ் கூறுகையில், ‘டிஜிட்டல் (எண்ம) முறையில் செயலிகள் மூலம் கடன் பெறுவது இப்போது அதிகரித்துள்ளது. இதில் அங்கீகாரமற்ற கடன் செயலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை ஒழித்து எண்ம முறையில் கடன் அளிக்கும் செயலிகளை ஒழுங்குமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம் அதிகாரபூா்வமற்ற செயலிகளை பொதுமக்கள் எளிதாகக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்தாமல் தவிா்க்க முடியும்’ என்றாா்.

