வங்கிகளில் வைப்புத்தொகையை அதிகரிக்க...

எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு, வங்கித் துறையை மேம்படுத்த, நிபுணர்கள் அடங்கிய உயர் நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளதைப் பற்றி...
வங்கிகளில் வைப்புத்தொகையை அதிகரிக்க...
Updated on
4 min read

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) நிகழ்த்திய உரையில், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை தளர்ச்சி இல்லாமல் முன்னிழுத்துச் செல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு,  வங்கித் துறையை மேம்படுத்த, நிபுணர்கள் அடங்கிய உயர் நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

வைப்புத் தொகை அதிகரிப்பு உள்பட, வங்கித் துறையின் வளர்ச்சிக்கு தேவையான பல அம்சங்கள் இந்தக் குழுவின் ஆலோசனைக்கு உட்படுத்தப்படும்' என்று  நிதித் துறை செயலாளர்  விளக்கம் அளித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், வங்கித் துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்பதை இந்தக் குறிப்பீடுகள் உணர்த்துகின்றன.

வங்கித் துறை என்பது, நாட்டு பொருளாதாரத்தை முன்னிழுத்துச் செல்லும் என்ஜின்களில் ஒன்றாகும். இருப்புள்ளவர்களிடம் இருந்து வைப்புத் தொகைகளைப் பெற்று, தேவையானவர்களுக்கு கடன் வழங்குவதுதான் வங்கிகளின் முக்கியச் செயல்பாடாகும்.

வங்கிகள் பற்றிய செயல்பாட்டு அறிக்கைகளில் அடங்கியிருக்கும் தகவல்கள்மூலம், நாட்டின் "பொருளாதார காளை' செல்லும் திசையை கணிக்க முடியும் என்றால் அது மிகையல்ல! எனவே, வங்கித் துறை பற்றி வெளியாகும் தகவல்களைக் கூர்ந்து கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

"வழங்கப்படும் கடன் தொகைகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது' என்ற அண்மைத் தகவல், வங்கித் துறை பற்றிய நற்செய்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடன் தொகை அதிகரித்தால் தொழில் வளர்ச்சி பெருகி, வங்கிகளின் லாபமும் அதிகரித்து, அவற்றின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் என்பதுதான் பொது விதியாகும். இந்தப் பொது விதியை உள்வாங்குவதற்கு முன்பு, கடன் வழங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை, வங்கிகள் எந்த வழியில் திரட்டுகின்றன என்ற விவரங்களை அலசி ஆராய வேண்டும்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் வைப்புத்தொகைகள்தான், வங்கிகளின் முக்கிய நிதி ஆதாரம் ஆகும்; அந்த ஆதாரத்தின் அளவு, வழங்கப்படும் கடன் தொகையைவிட அதிகமாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால், அது பல எதிர்மறை விளைவுகளுக்கு வித்திட்டு விடும்.

வங்கிகளின் கடன் வளர்ச்சி 11.6 சதவீதம்; அவற்றின் வைப்புத்தொகை வளர்ச்சி 9.5 சதவீதம் என்ற அண்மைத் தகவலில் பல எதிர்மறை செய்திகள் பொதிந்துள்ளன. கடன் வளர்ச்சிக்கு ஏற்ப, வைப்புத்தொகைகளின் அளவு அதிகரிக்கவில்லை என்பது அதில் முக்கியமான ஒன்றாகும். ஒருசில வங்கிகளைத் தவிர, பல பெரிய, நடுத்தர மற்றும் சிறிய வங்கிகளின் வைப்புத்தொகையினஅ அளவு அதிகரிப்பு,, கடன் வளர்ச்சியை விடக் குறைந்த அளவிலேயே நகர்ந்து கொண்டு வருகிறது என்பது புள்ளிவிவரங்கள் மூலம் வெளிப்படுகிறது.

இந்த நிலையில், கடன் வழங்குவதற்கு வங்கிகள், கடன் சந்தையை நாடுகின்றன. பல வங்கிகள் ஒரே சமயத்தில் கடன் சந்தையை நாடும்போது, நிதித் தேவையின் அளவீடு அதிகரித்து, வட்டி விகிதம் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.  இதுபோன்ற நிதி ஆதாரக் குறைபாடுகளால், சில வங்கிகள் திவாலான  நிகழ்வுகள், நம் வங்கித் துறை சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளதை மறக்க முடியாது.

வங்கி வைப்புத்தொகை வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் சுணக்க நிலைக்கான காரணங்களை அலசி ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அவை, உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. காரணங்களுக்கான பட்டியலில், முதலிடம் வகிப்பது, வைப்புத்தொகைகளுக்கான வருவாய், பண வீக்கத்துக்கு ஏற்றபடி இல்லாததுதான். மேலும், அண்மைக்காலங்களில் பங்குச் சந்தை, பரஸ்பர நிதித் திட்டங்கள் (மியூச்சுவல் ஃபண்ட்ஸ்), தொழில் நிறுவனக் கடன் பத்திரங்கள் போன்றவை அதிக வருவாய் ஈட்டித் தரும் முதலீடுகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

என்.எஸ்.டி.எல்., சி.டி.எஸ்.எல். ஆகிய தளங்களின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆரம்பத்தில், 11 ஆயிரம் கோடிகளாக இருந்த, பங்குச் சந்தையில் பங்கு கொள்வதற்குத் தேவையான "டிமாட்' கணக்குகள், 2025-ஆம் ஆண்டு முடிவில் 21.6 ஆயிரம் கோடிகளாக அதிகரித்திருக்கின்றன.

பரஸ்பர நிதியை (மியூச்சுவல் ஃபண்ட்ஸ்) நிர்வகிக்கும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களுக்கான முதலீடுகள், ஆண்டுக்கு 25 சதவீதத்துக்கு மேலான வளர்ச்சியில், 80 லட்சம் கோடிகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில், மாதாந்திர முதலீட்டு திட்டத்தின் (எஸ்.ஐ.பி.) கீழ் திரட்டப்படும் தொகை மட்டும் சுமார் 3 லட்சம் கோடி ஆகும்.

முதலீட்டார்களின் நிதி நிர்வாகம் பற்றிய மாறுபட்டு வரும் சிந்தனைகளுக்கு மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்களைச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். தங்கள் எதிர்காலத் தேவைகளுக்கான சேமிப்புக்கு, வங்கி வைப்புத்தொகைகளை மட்டும் சார்ந்திருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணத்தையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நேரடி பங்குச் சந்தை அல்லது பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்ஸ்) முதலீடுகள்மூலம் கிடைக்கும்  வருமானம், வங்கி வைப்புத்தொகைகளைவிட அதிகமாக இருப்பது, இது போன்ற மாறுபட்ட முதலீட்டு சிந்தனைகளுக்கு வழிகாட்டியிருக்கிறது எனலாம். முதலுக்கு மோசம் செய்யாத வங்கி வைப்புத்தொகைகள்தான் எதிர்கால பாதுகாப்புக்கு உகந்தது என்ற நடைமுறைச் சித்தாந்தத்தை, முதலீட்டாளர்கள் மறக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை.

அண்மைச் செய்தியின்படி, இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ரூ.2.5 லட்சம் கோடி அளவிலான புதிய பங்கு பத்திரங்கள், வங்கி வைப்புத்தொகைகளை அட்டையாக  உறிஞ்சி, அதன் வளர்ச்சிக்கு ஒரு சவாலாக அமையும். வங்கி வர்த்தகத்தின் முக்கிய அங்கமான வைப்புத்தொகைகளைப் பாதிக்கும் இது போன்ற நிகழ்வுகளைச் சமாளிக்க, வங்கிகள் தயாராக உள்ளனவா என்பது கேள்விக்குறி.

நடைமுறையில் இருக்கும் வழிகாட்டி முறைகளால், வங்கிகளின் கைகள் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன என்று சொல்லலாம். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் அடிப்படையிலான "குறிப்பிட்ட வைப்புத்தொகை காலத்துக்கு குறிப்பிட்ட வட்டி விகிதம்' என்பதை மீறி அதிக வட்டி விகிதத்தை வழங்கும் உரிமை வங்கிகளுக்கு கிடையாது. எடுத்துக்காட்டாக, மூன்று வருடத்தில் திருப்பிச் செலுத்தக்கூடிய கடன்களை அதிகமாக வழங்கியிருக்கும் வங்கி, அதைச் சமன்படுத்த மூன்று ஆண்டு வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை தேவைக்கு ஏற்ப தன்னிச்சையாக உயர்த்த முடியாது. வங்கித் துறையில், இதை "கேப்ஸ் ஃபில்லிங்' என்று கூறுவர்.

இதுபோன்ற "கேப்ஸ்'களை நிரப்ப, வங்கிகள் வெளிச் சந்தையில், அதிக வட்டி கொடுத்து கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. கடந்த ஓர் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 125 புள்ளிகள் வரை குறைக்கப் பட்டிருந்தாலும், கடன் சந்தையில் வட்டி விகிதம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பணப் புழக்கத்தை அதிகரிக்க, கடந்த இரு மாதங்களில், கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறுவது (ஓ.எம்.ஓ.), கரன்சி ஸ்வாப்ஸ் போன்ற நடவடிக்கைகளால்,  ரிசர்வ் வங்கி ரூ.3 லட்சம் கோடி சந்தையில் புழக்கத்தில் விட்டுள்ளது. வங்கிகளின் வைப்புத்தொகைகளுக்கும், கடனுக்கும் இடையே நிலவிக் கொண்டிருக்கும் இடைவெளியை இதுபோன்ற நடவடிக்கைகள் ஓரளவு சமன் செய்யும். எனினும், இதுபோன்ற நடவடிக்கைகள் தற்காலிகமானதுதான். எனவே, வங்கிகளின் வைப்புத்தொகைகளை அதிகரிக்கத் தேவையான நிரந்தர நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

வங்கி வைப்புத்தொகைகளின் பக்கம், முதலீட்டாளர்களின் கவனத்தைத் திருப்பத் தேவையான ஆயுதம், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிடம்தான் உள்ளது. அதில் ஒன்று, வங்கி வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை, நிதி ஆதார தேவைக்கு ஏற்ப அந்தந்த வங்கிகளே குறிப்பிட்ட வரையறைக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதாகும். வெளிச் சந்தையில் அதிக வட்டியில் கடன் பெறுவதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்களுக்கு வட்டியை அதிகரித்து வழங்கினால், வங்கிகளின் வைப்புத்தொகை மீது முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

வங்கி வைப்புத்தொகைகள்மூலம் பெறப்பட்டும் வட்டி வருவாய்க்கான வருமான வரிச் சலுகை, வயதுக்கு ஏற்ப, மிதப்படுத்தப்பட்ட அளவில்தான் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பெறப்படும் வருவாய்க்கான புள்ளிவிவரங்கள் அளிக்கப்படாத நிலையில், அது குறைந்த அளவிலான வருவாயாகத்தான் இருக்கும் என்று கருதத் தோன்றுகிறது. வங்கி வைப்புத்தொகைகள் மீது பெறப்படும் வருவாய்க்கு, வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டால், முதலீடுகள் வங்கிகள் நோக்கி நகருவதற்கான சாத்தியக்கூறுகள் பெருமளவில் உள்ளன.

"தீதும் நன்றும் பிறர்தர வாரா'. வாடிக்கையாளர்களுடனான உறவுப் பாலத்தை மறந்து வருவதன்மூலம், வைப்புத்தொகை பெருக்கத்துக்கான முக்கியப் பாதையை அடைத்து வருவது, வங்கிகள் தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொண்ட வேகத் தடையாகும். வங்கி நிர்வாகங்கள் இதுபோன்ற தடைக்கற்களை கண்டறிந்து, உறவுப் பாதையைச் செப்பனிட்டால் வைப்புத்தொகை அதிகரிக்க வழி வகுக்கும்.

நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்நிலைக் குழு, வங்கித் துறை வளர்ச்சியின் முக்கிய அங்கமான வைப்புத்தொகை பெருக்கத்துக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், விரைவில் வழங்கி, அதை மத்திய அரசு அமல் படுத்தும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

கட்டுரையாளர்: பொருளாதார நிபுணர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com