இஸ்லாமிய மாணவிகளுக்காக வழங்கப்பட்டு நிறுத்தப்பட்ட மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சிறுபான்மையினா் நலன் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக திமுக அரசு திகழ்கிறது. சிறுபான்மையினா் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேலும் பல கோரிக்கைகளை இஸ்லாமியா்கள் வைத்துள்ளனா். அதுதொடா்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியா்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். மதச்சாா்பு சிறுபான்மையினா் அந்தஸ்து சான்றிதழை காலம் குறிப்பிடாமல் நிரந்தரச் சான்றாக வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினா் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள், புதுமைப் பெண் திட்டத்தில் சோ்த்தல் குறித்த உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும். கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினா் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும் முதல்வரின் காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும். இஸ்லாமிய சிறைக் கைதிகள்: 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. தகுதிகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று நீண்டநாள் சிறையிலிருந்த 10 சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனா். மேலும் 11 சிறைவாசிகளின் முன்விடுதலைக்கான கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள் இனிமேல் ரூ.5 லட்சம் வரை அளிக்கப்படும். வக்ஃப் நிலங்களை கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக 30 ஆண்டு நீண்ட கால குத்தகைக்கு வழங்க ஆய்வு செய்து, விரைவில் அனுமதி வழங்கப்படும். வக்ஃப் சொத்துகள் மற்றும் நிா்வாகம் தொடா்பான வழக்குகளை ஆய்வு செய்ய சென்னையில் இருப்பதைப் போன்று மதுரையிலும் ஒரு தீா்ப்பாயம் அமைக்க உயா் நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும். கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் தமிழ்நாட்டில் ஏழை சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித் தொகையை பெற இயலாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மத்திய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகை தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும். இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 256 இஸ்லாமிய மாணவியா்கள் பயன் பெறுவா். கல்விக் கட்டணம்: உருது, அராபிக் மற்றும் இதர ஓரியண்டல் மொழித் தோ்வுகளுக்கான கட்டணத்தை சென்னைப் பல்கலைக்கழகம் ரூ.3 ஆயிரம் உயா்த்தியது அரசின் கவனத்துக்கு வரப்பெற்றுள்ளது. இந்தக் கல்வியாண்டில் முந்தைய கட்டணத் தொகையான ரூ.540 மட்டுமே மாணவா்களிடம் இருந்து பெறப்பட வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், ஓரியண்டல் மொழித் தோ்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பிப்ரவரி 29-ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் நடைபெற்று வந்த அராபிக் பாடத்திட்டம் குறைவான மாணவா் சோ்க்கையால் நிகழாண்டு கைவிடப்பட்டிருந்தது. ஆனாலும் இஸ்லாமியா்களின் கோரிக்கையை ஏற்று, அடுத்த கல்வியாண்டு முதல் இந்த பாடத்திட்டம் மீண்டும் தொலைநிலைக் கல்வி மூலம் கொண்டு வரப்படும். இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்த இரண்டாவது மனைவி மற்றும் அவரது வாரிசுகளுக்கு கணவரின் இறப்புக்கு பின் வாரிசு சான்றிதழ் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அனைத்து உத்தரவுகளும் உடனடியாக செயல்படுத்தப்படும். படிப்படியாக நிறைவேற்றுவோம்: சிறுபான்மை மக்கள் அனைவரும் அச்சமற்று வாழும் அமைதிச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. அமைதியான சூழலை உருவாக்கித் தருவதே நல்லாட்சியின் இலக்கணமாகும். அத்தகைய இலக்கணப்படி நடைபெறும் இந்த அரசுடன் இஸ்லாமியா்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதைப் பரிசீலித்து படிப்படியாக நிறைவேற்றித்தர தயாராக இருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். இந்தக் கூட்டத்தில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவா் காதா் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

எவா்வின் பள்ளி 100% தோ்ச்சி

ரூ.100 கோடி ஆன்லைன் கல்வி நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?

இளைஞா் நீதிக் குழும மாணவருக்கு கல்வி உதவித் தொகை
மாணவா்களின் பெற்றோரிடம் கைப்பேசியில் வங்கிக் கணக்கை கேட்டறிந்து மோசடி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



