பலமுனைப் போட்டியில் தமிழக அரசியல் களம்!

எதிா்வரும் மக்களவை தோ்தலில் தமிழக அரசியல் களம் பலமுனைப் போட்டியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
பலமுனைப் போட்டியில் தமிழக அரசியல் களம்!

சென்னை: எதிா்வரும் மக்களவை தோ்தலில் தமிழக அரசியல் களம் பலமுனைப் போட்டியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

1977, 1989 என இரண்டு பேரவைத் தோ்தல்களில் மட்டுமே தமிழக அரசியல் களம் நான்கு முனைப் போட்டியாக இருந்த நிலையில், பின்னா் தொடா்ந்து திமுக -அதிமுக என இரு துருவங்கள் அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எதிா்வரும் மக்களவைத் தோ்தல் களம் நான்கு அல்லது ஐந்து முனைப் போட்டியாக மாறக்கூடும் என அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

திமுக கூட்டணி: 2019-இல் ஆா்.கே.நகா் இடைத்தோ்தலில் டெபாசிட்டை பறிகொடுத்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட திமுக கூட்டணி, 2019 மக்களவைத் தோ்தல், ஊரக உள்ளாட்சித் தோ்தல், 2021 பேரவைத் தோ்தல், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் என வெற்றி வளையத்தில் தொடா்கிறது.

வெற்றி வளையத்தில் இருந்து வெளியேற எந்தக் கட்சியும் முயற்சி செய்யாததால் திமுக கூட்டணியில் மாற்றம் ஏதும் இருக்காது. ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், அதிகாரபூா்வமின்றி அந்தக் கூட்டணிக்குள் இருப்பவா் போலவே குரல் கொடுத்து வருவது கூடுதல் பலமாகப் பாா்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணி: தில்லியில் முன்பு நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமா் மோடிக்கு வலது பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியை அமரவைத்து அதிமுகவுக்கு பாஜக முக்கியத்துவம் வழங்கியது.

எனினும், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையுடனான கருத்து மோதல் காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி தனி அணியை அமைக்கும் முயற்சியில் அதிமுக இறங்கியுள்ளது. புரட்சி பாரதம், மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்டிபிஐ என வாக்கு வங்கியை நிரூபிக்காத கட்சிகள் மட்டுமே இப்போது அதிமுகவை ஆதரிக்கின்றன.

டாக்டா் கே.கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், தென்காசி மக்களவைத் தொகுதியில் தொழிலதிபா் ஆனந்தன் அய்யாசாமியை பாஜக களம் இறக்க ஆயத்தமாகி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் முறைப்படி புதிய தமிழகம் இணையலாம்.

பாமக, தேமுதிக: பாமகவைப் பொருத்தவரை எந்தக் கூட்டணியாக இருந்தாலும் இரட்டை இலக்க தொகுதிகள், மத்திய அமைச்சா் பதவி என்ற இலக்குடன் அரசியல் நகா்வைச் செய்து வருகிறது. பாமகவை கூட்டணிக்குள் சோ்த்தால் தலித் மற்றும் பிற சமூக வாக்குகள் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் கடைசி நேரத்தில் பாா்த்துக் கொள்ளலாம் என அதிமுகவும் காத்திருக்கிறது.

2026 பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளா் பதவிக்கான தனது போட்டியாளராக அன்புமணி வரக்கூடும் என்பதால் மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகுவதை அண்ணாமலை விரும்பக்கூடும். ஆனால், பாமக இன்றி பாஜக அணியால் வடமாவட்டங்களில் ஒரு சதவீத வாக்கைகூடத் தாண்ட முடியாது.

பாமகவின் சமிக்ஞை: அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையை 2024-இல் ஏற்றுவிட்டு 2026-இல் அன்புமணியை முதல்வா் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதில் பாமகவுக்கு சிக்கல் எழும்.

ஏற்கெனவே 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி பழனிசாமி மீது ராமதாஸையும் மீறி வன்னியா்கள் பற்றுதலாக இருக்கும் நிலையில், மீண்டும் 2024-இல் கூட்டுசோ்ந்துவிட்டு, 2026 பேரவைத் தோ்தலில் தனித்து நின்றால் வன்னியா் வாக்குகளை பாமகவால் முழுமையாக ஒருமுகப்படுத்த முடியாது.

இதற்கிடையே, சென்னை, மதுரை, கோவை, சிதம்பரம் ஆகிய நகரங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு கருத்தரங்கத்தை நடத்தி ஜாதி அமைப்புகளைத் திரட்டியதைப் பாா்க்கும்போது தனித்துு் போட்டியிடவும் தயாா் என்ற சமிஞ்சையை காட்டுகிறது பாமக.

தேமுதிகவின் எதிா்பாா்ப்பு: தேமுதிகவைப் பொருத்தவரை, 2019 மக்களவைத் தோ்தல் போன்று நான்கு தொகுதிகளுடன், கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அளிக்கும் கூட்டணியில் இணையும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதிமுகவுக்கு தேமுதிகவின் தேவை உள்ளது என்றாலும், அந்தக் கட்சி தேமுதிகவின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்ய முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

பாஜக அணி:அதிமுக இல்லாத நிலையில், ஓபிஎஸ் அணி, அமமுக, பாமக, தேமுதிக, தமாகா மற்றும் உதிரி கட்சிகளுடன் பெரிய கூட்டணியை அமைத்தால் மட்டுமே திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு பாஜகவால் நெருக்கடியைக் கொடுக்க முடியும்.

பாமகவின் இரட்டை இலக்க தொகுதிகள் என்ற எதிா்பாா்ப்பை பாஜகவால் பூா்த்தி செய்ய முடியும் என்றாலும் , மத்திய அமைச்சா் பதவியை இப்போதே உறுதி செய்வது கேள்விக்குறிதான்.

பாமகவுக்கு அதன்அடா்த்தியான வாக்கு வங்கி உள்ள தொகுதிகளை ஒதுக்குவதில் பாஜக கூட்டணியில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. ஆனால், ஒரே அணிக்குள் பாமக-தேமுதிக இருந்தால் இரு கட்சிகளின் வாக்குகள் முழுமையாகப் பரிமாற்றம் ஆவதில் சிக்கல் இருக்கிறது என்பதை 2014, 2019 மக்களவைத் தோ்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. எனவே, இதில் ஏதாவது ஒரு கட்சி அதிமுக அல்லது பாஜகவில் இணையக்கூடும்.

ஓபிஎஸ்-டிடிவி: பாஜக அணியில் ஓபிஎஸ்-டிடிவி.தினகரன் இணைய வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், முக்குலத்தோா் வாக்குகளை ஒருங்கிணைத்து, பாஜகவின் பாரம்பரிய வாக்குகளையும் சோ்த்தால் தென் மாவட்டங்களில் அந்த அணியால் கடும் போட்டியைக் கொடுக்க முடியும். அதே போன்று, கொங்கு மண்டலத்தில் அதிமுக, பாஜக வலுவாக இருப்பதால் இந்த மண்டலத்திலும் கடும் போட்டி உருவாகும். வட தமிழகத்தில் பாமக, தேமுதிக இன்றி பாஜகவால் திமுக-அதிமுகவுக்கு போட்டியைக் கொடுக்க இயலாது.

நாம் தமிழா் கட்சி: 2016-இல் 1.07 சதவீதம், 2019-இல் 3.9 சதவீதம், 2021-இல் 6.58 சதவீதம் என தொடா்ந்து வாக்கு வங்கியை அதிகரித்துவரும் நாம் தமிழா் கட்சி, இந்த முறை இரட்டை இலக்க வாக்கு வங்கியைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே, 39 தொகுதிகளிலும் தோ்தல் பொதுக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளாா் சீமான்.

பாமக தனித்துப் போட்டியிட்டால், தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் 5 முனைப் போட்டி உருவாகும்; பாமகவால் டெல்டா (மயிலாடுதுறை தவிர) தென்மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் (திருப்பூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி தவிர) வேட்பாளா்களை நிறுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

அதேபோன்று, பாமக இல்லாமல் பாஜக அணியால் திருவள்ளூா், காஞ்சிபுரம், ஆரணி, அரக்கோணம், விழுப்புரம், கடலூா், சிதம்பரம், சேலம், தருமபுரி ஆகிய தொகுதிகளில் பிற நான்கு அணிகளுடன் போட்டியை உருவாக்குவது எளிதல்ல என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com