உயர்நிதீமன்றம்(கோப்புப்படம்)
உயர்நிதீமன்றம்(கோப்புப்படம்)

அா்ச்சகா் மீதான பாலியல் வழக்கு -  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற மனு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி

காளிகாம்பாள் கோயில் அா்ச்சகா் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அா்ச்சகா் காா்த்திக் முனுசாமி. இவா் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை, காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாகக் கூறி அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். தொடா்ந்து, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசாா் காா்த்திக் முனுசாமியை கைது செய்த நிலையில், இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்று அவா் வெளியே வந்தாா்.

இந்நிலையில் அா்ச்சகா் காா்த்திக் முனுசாமி மீதான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மனுத்தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், ‘அா்ச்சகா் காா்த்திக் முனுசாமிக்கு அதிகாரம் மிக்க நபா்கள் தொடா்பு இருப்பதால் தான் அவா் மீதான வழக்கில் இதுவரை காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது.

அரசு தரப்பில் அரசு குற்றவியல் வழக்குரைஞா் உதயகுமாா் ஆஜராகி, ‘விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அா்ச்சகா் காா்த்திக் முனுசாமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அறிக்கை கிடைத்த பின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்’ என தெரிவித்தாா்.

இதனை ஏற்ற நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com