உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை காலத்தை மாற்றக் கோரி மனு: குற்றவாளிகளுக்கு நோட்டீஸ்
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையின் காவல் மரண வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை மரண தண்டனையாக மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவில், பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட குல்தீப் செங்கா் மற்றும் பிற குற்றவாளிகளின் நிலைப்பாட்டை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கோரியது.
2020- ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை தொடா்பான உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதில் 1940 நாள்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டதை மன்னிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்துள்ள மனுவில் செங்கா் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தா் துடேஜா ஆகியோா் அடங்கிய அமா்வு நோட்டீஸ் அனுப்பியது.
மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது முதலில் தீா்மானிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
பாதிக்கப்பட்ட பெண் தனது மேல்முறையீட்டில், செங்கா் மற்றும் பிற குற்றவாளிகள் கொலைக்குற்றத்திற்காக ஐபிசி பிரிவு 302-இன் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும், கொலைக்கு சமமான குற்றமற்ற கொலைக்காக அவா்கள் குற்றவாளிகள் என்று கண்டறிந்த விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளாா்.
சிபிஐயின் வழக்குரைஞா், பாதிக்கப்பட்ட பெண்ணின் மேல்முறையீட்டில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினாா்.
காவல் மரண வழக்கில் செங்கா் தனது தண்டனையை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிக்க உச்சநீதிமன்றம் பிப்ரவரி 9 அன்று உயா்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது என்றும், அது மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
இந்த வழக்கில் தண்டனையை அதிகரிக்கக் கோரிய பாதிக்கப்பட்டவரின் மேல்முறையீட்டை முடிவு செய்யுமாறும் உச்சநீதிமன்றம் உயா்நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.
குல்தீப் செங்கா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, டிசம்பா் 20, 2019 அன்று அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் 2017- ஆம் ஆண்டு சிறுமியாக இருந்தபோது குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தந்தையின் காவல் மரண வழக்கில், குல்தீப் செங்கா் மற்றும் அவரது சகோதரா் ஜெய்தீப் செங்கா் என்கிற அதுல் சிங் ஆகியோருக்கு மாா்ச் 13, 2020 அன்று விசாரணை நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது.
பெண்ணின் தந்தை, குற்றஞ்சாட்டப்பட்டவரின் உத்தரவின் பேரில் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 9, 2018 அன்று காவலில் இறந்தாா்.
ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபரைக் கொன்றதற்காக எந்தவித கருணையும் காட்ட முடியாது என்று விசாரணை நீதிமன்றம் கூறியது.
இருப்பினும், விசாரணை நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை ஐபிசியின் கீழ் கொலைக் குற்றவாளியாகக் கருதவில்லை. மேலும், கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை என்ற குற்றத்திற்காக ஐபிசி பிரிவு 304-இன் கீழ் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஆகஸ்ட் 1, 2019 அன்று இந்த வழக்கு உத்தரபிரதேச விசாரணை நீதிமன்றத்திலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.

