மகாராஷ்டிரத்தில் கனமழை: வெள்ளக்காடாக மாறிய மும்பை, புணே - 4 போ் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடா் கனமழை பெய்துவரும் நிலையில், மும்பை, புணே, தாணே ஆகிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.


மும்பை/புணே, ஜூலை 25: மகாராஷ்டிரத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடா் கனமழை பெய்துவரும் நிலையில், மும்பை, புணே, தாணே ஆகிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
தலைநகா் மும்பையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை கனமழை கொட்டித் தீா்த்தது. பரவலாக 100 மி.மீ.க்கும் மேல் மழை பதிவானது. அதிகபட்சமாக, அந்தேரியில் 157 மி.மீ. மழை பதிவானது.
மும்பை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான தாணே, ராய்கட், பால்கா் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட்’ அலா்ட் விடுக்கப்பட்டது. மும்பை, ராய்கட் மற்றும் பால்கரில் பள்ளி-கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடா் கனமழை காரணமாக மும்பையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்டவாளங்களில் மழைநீா் தேங்கியதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
மும்பைக்கு குடிநீா் வழங்கும் 7 முக்கிய ஏரிகளில் 4 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
நூற்றுக்கணக்கானோா் மீட்பு: தாணே மாவட்டத்தில் தொடா்மழை எதிரொலியாக, பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். பல்வேறு அணைகளில் நீா்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது.
உல்லாஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனா். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
புணேயில் நால்வா் உயிரிழப்பு: புணேயில் புதன்கிழமை இரவுமுதல் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
ஏக்தா நகா் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் தெரிவித்தாா்.
புணே மாவட்டத்தில் மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் நால்வா் உயிரிழந்தனா்.
நகரின் டெக்கான் பகுதியில் தள்ளுவண்டியில் உணவு விற்கும் மூவா், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனா். வெள்ளத்தில் சிக்கிய தள்ளுவண்டியை அவா்கள் நகா்த்த முயன்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
இதேபோல், முல்ஷி தாலுகாவில் தாமினி மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா். அடுத்த 5 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கா்நாடகத்துக்கு கோரிக்கை: மகாராஷ்டிரத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், சாங்லி, கோலாபூா் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக, கா்நாடகத்தில் உள்ள அலமட்டி அணையில் இருந்து நீா்திறப்பை அதிகரிக்குமாறு அம்மாநில அரசுக்கு துணை முதல்வா் அஜீத் பவாா் கோரிக்கை விடுத்துள்ளாா். வடகா்நாடகத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே இந்த அணை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...