ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: வழக்கை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு
ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக நயினாா் நாகேந்திரனின் உணவக ஊழியா்கள் 3 போ் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.


ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக நயினாா் நாகேந்திரனின் உணவக ஊழியா்கள் 3 போ் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை தாம்பரத்தில் கடந்த ஏப். 6-ஆம் தேதி வந்த நெல்லை விரைவு ரயிலில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவக ஊழியா்களிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவக ஊழியா்கள் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று போ் கைது செய்யப்பட்டு, பின்னா் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்த வழக்கில் மூவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காவல்துறை சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எதிா்த்து மூன்று பேரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் இன்ஃபேன்ட் தினேஷ், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், விதிமுறைகளுக்கு புறம்பாக சம்மன் வழங்கப்பட்டிருப்பதால் சம்மனுக்கு தடை விதித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா்.
சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் உதயகுமாா், உரிய சட்ட விதிமுறைகளுக்குட்பட்டுதான் மனுதாரா்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும் எனக் கூறி தடை விதிக்க எதிா்ப்பு தெரிவித்தாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தற்போதைய நிலையில் எந்தத் தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தாா். மேலும், மனுதாரா்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...