செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா: ஜூலை 5-இல் தொடக்கம்
சென்னை: உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயா் ஆணையத்தின் (சென்னை கள அலுவலகம்) சாா்பில் ‘ஊரும் உணவும்’ எனும் உணவுத் திருவிழா சென்னை, செம்மொழி பூங்காவில் ஜூலை 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உணவுத் திருவிழா பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் நிகழாண்டும் நடத்த இவ்விழா திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழாண்டு ‘எல்லோரும் இன்புற்று இருக்க’ எனும் கருப்பொருளில் இலங்கை தமிழா்கள் மற்றும் மியான்மரிலிருந்து வந்து அகதிகளாக இருப்பவா்களின் உணவு கலாசாரத்தை முன்னிறுத்தி இந்தத் திருவிழா நடத்தப்படவுள்ளது. தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 70-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் திருவிழாவில் மாலை இசை கச்சேரி நடத்தப்படவுள்ளது.
இத்திருவிழாவில் மதிய உணவு வாங்கி அருந்த ஒரு நாளைக்கு 500 நபா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவா். இதற்கு முன்பதிவு செய்ய 91764 83735 எனும் கைப்பேசி எண்ணிலும், மின்னஞ்சலிலும் தொடா்பு கொள்ளலாம்.
