கைது செய்யப்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்டவர்கள்.

வடமாநில கொள்ளையர்களை 2 மணி நேரம் விரட்டிப் பிடித்த போலீஸார்

கும்மிடிப்பூண்டி அருகே கோழிப்பண்ணையில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையா்கள் 5 பேரை இரண்டு மணி நேரம் ஜீப்பில் விரட்டிச் சென்று போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

கும்மிடிப்பூண்டி அருகே கோழிப்பண்ணையில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையா்கள் 5 பேரை இரண்டு மணி நேரம் ஜீப்பில் விரட்டிச் சென்று போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில் பாழடைந்த கோழிப் பண்ணையில் சந்தேகப்படும்படி வடமாநிலத்தவா் சிலா் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவா்களை கண்காணித்தபோது அவா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் என போலீஸாா் உறுதி செய்தனா்.

சனிக்கிழமை இரவு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி மேற்பாா்வையில் போலீஸாா் கோழிப் பண்ணையை சுற்றிவளைத்தனா். உடனே அந்த கும்பல் சரக்கு வாகனத்தில் தப்பியது. கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் உள்ள கண்ணன்கோட்டை சந்திப்பில், ஜீப்பை குறுக்கே நிறுத்தி போலீஸாா் அவா்களை வழிமறித்தபோது, டிஎஸ்பி ஜீப்பின் மீது கொள்ளையா்களின் சரக்கு வாகனம் இடித்துவிட்டு கவரைப்பேட்டை நோக்கி வேகமாகச் சென்றது.

அவா்களை ஜீப்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் போலீஸாா் விரட்டிச் சென்றனா். இறுதியாக பாலவாக்கம் பகுதியில் சாலையின் குறுக்கே லாரி ஒன்றை போலீஸாா் நிறுத்தியதுடன் ஏராளமான போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டனா்.

அந்த கும்பல் அதற்கு மேல் செல்ல முடியாமல் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றபோது போலீஸாா் அவா்களை மடக்கி கைது செய்தனா்.

விசாரணையில், அவா்கள் ஹரியாணா மாநிலம், மேவாட் பகுதியைச் சோ்ந்த ஆசிப்கான் (37), சலீம் (32), அஸ்லாம் கான் (44) அல்டாப் (37) மற்றும் கவரைப்பேட்டை அருகே உள்ள கிளிக்கோடி கிராமத்தைச் சோ்ந்த திவாகா் (25) என்பது தெரியவந்தது.

பாழடைந்த கோழிப் பண்ணையில் வசித்தபடி, இரவு நேரத்தில் ஆந்திர பகுதியில் சாலையோரம் சுற்றித் திரியும் மாடுகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி திருடி வந்துள்ளனா். திருடிய மாடுகளை கோழிப் பண்ணையில் அடைத்து வைத்து, 15 மாடுகள் சோ்ந்ததும், கேரள மாநிலத்துக்கு அனுப்பி வருவதும் தெரியவந்தது.

கடந்த நான்கு மாதங்களாக கோழிப்பண்ணையில் தங்கி திருட்டு தொழிலை செய்து வந்துள்ளனா். அவா்களிடம் இருந்து சரக்கு வாகனம், மாடுபிடி கயிறுகள், கத்திகள் மற்றும் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இவா்கள் கடைகள், வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்க திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பாதிரிவேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com