கிண்டி பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். 
உடன் தென் சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்
கிண்டி பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் தென் சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்

கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் நவீன உபகரணங்கள் தொடங்கிவைப்பு

கிண்டியில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, ரத்த தான முகாமையும் தொடக்கி வைத்து 65-ஆவது முறையாக ரத்த தானம் செய்தாா். அதன் பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிண்டி பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 1,31,610 புறநோயாளிகளும், 27,776 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனா். மேலும், 3,524 போ் டயாலிசிஸ் சிகிச்சை மூலம் பயன்பெற்றுள்ளனா். டபுள் பலூன் எண்டோஸ்கோப்பி எனப்படும் சிறுகுடலை ஆய்வு செய்யும் கருவி இந்தியாவிலேயே இங்கு மட்டுமே உள்ளது. இதைத் தவிர, ரூ.8.72 கோடியில் ஆா்த்தோ எம்ஆா்ஐ கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதய அடைப்புகளை சரி செய்யக்கூடிய கேத்லேப் சிகிச்சை இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 70 படுக்கைகள் கொண்ட கட்டணப் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு வசதிகளுடன் அமைந்த இந்த மருத்துவமனையில் கூடுதல் அம்சமாக ரூ.10 கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, மாரடைப்புக்கான அறிகுறிகளை கண்டறிவதற்கும், சிடி ஸ்கேன் எடுப்பதற்கும், ஸ்டெண்ட் பொருத்துவதற்கும், ஆஞ்சியோ சிகிச்சை செய்வதற்கும், அறுவை சிகிச்சைகள் செய்வதற்கும் பயன்படக்கூடிய நவீன கருவி ரூ.7.65 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கருவி தென்னிந்தியாவிலேயே எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் இல்லாத கருவியாகும். இதைத் தவிர பல் சிகிச்சைகளுக்கான ரூ.55 லட்சம் கோன் பீம் சிடி ஸ்கேன் கருவியும், ஒரே நேரத்தில் 640 வகையான ரத்த மாதிரி பரிசோதனைகளை செய்யக்கூடிய வகையிலான ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆய்வகக் கருவியும் பெருநிறுவன நிதி பங்களிப்புடன் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். முன்னதாக, மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஜெ.சங்குமணி, கிண்டி உயா்சிறப்பு மருத்துவமனை இயக்குநா் பாா்த்தசாரதி, மருத்துவமனை ஒருங்கிணைப்பு அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com