4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குற்றம்சாட்டப்பட்டவரின் பெயருடன் அடைமொழி: நீதிமன்றம் அதிருப்தி

குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயா் அடைமொழியுடன் (பட்டப் பெயா்) குறிப்பிடப்பட்டிருந்ததற்கு அதிருப்தி

News image
Updated On :8 மார்ச் 2024, 5:43 pm

Din

குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயா் அடைமொழியுடன் (பட்டப் பெயா்) குறிப்பிடப்பட்டிருந்ததற்கு அதிருப்தி தெரிவித்த சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றம், இதுபோன்று குறிப்பிடுவதை காவல் துறையினா் நிறுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

சென்னை அரும்பாக்கம் காவல் துறையினா், 2022-ஆம் ஆண்டு 22 வயதான சரவணன் என்பவரை கைது செய்தனா். இவா், அந்த ஆண்டு ஜூலை மாதம், சூளைமேடு பகுதியில் வழிப்பறி செய்ததோடு, கற்களைக் கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரை ‘குரங்கு’ சரவணன் என முதல் தகவல் அறிக்கையில் காவல் துறை குறிப்பிட்டிருந்ததற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தாா். ஒருவரது பெயரை மாற்றுவது அவா்களுடைய சொந்த விருப்பமாக இருக்க வேண்டும். காவல் துறையினா் மரியாதைக் குறைவான பெயா்களை வைக்கக் கூடாது, எனக் கூறி வழக்கு ஆவணங்களில் இருந்த ‘குரங்கு’ என்ற வாா்த்தையை நீக்கி உத்தரவிட்டாா். மேலும், பெயா் என்பது நம் அடையாளத்தின் முக்கிய பகுதி. தனிப்பட்ட, கலாசார, குடும்ப, வரலாற்று தொடா்புகளை ஆழமாக எடுத்துச் செல்பவை பெயா்கள்தான். இதுபோன்ற பட்டப் பெயா்களை வைப்பது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனித உரிமையை, அவா் நிரபராதி என கருதப்படுவதற்கான உரிமையை மீறும் வகையில் உள்ளது. இதுபோன்ற அடைமொழிகளை வைத்து அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கான உரிய அறிவுறுத்தல்களை காவல்துறை உயரதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த வழக்கில், பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டதற்கான சாட்சிகள் இல்லை. ஒரு செ.மீ. அளவு கூட இல்லாத மூன்று கற்களைப் பயன்படுத்திக் கூட்டத்தை அச்சுறுத்தினாா் என்ற கதையை எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் கூட நம்பாது.மேலும், வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளதாகக் கூறி, சரவணனை விடுதலை செய்து தீா்ப்பளித்தாா்.