திருவொற்றியூரில் ரூ.35 கோடியில் கடற்கரை பூங்கா

திருவொற்றியூா்: திருவொற்றியூரில் ரூ.35 கோடியில் கடற்கரை பூங்கா அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் திருவொற்றியூா், பாரதியாா் நகா் முதல் மஸ்தான் கோயில் வரையிலான 2 கி.மீ. தொலைவுக்கு ரூ.35 கோடியில் கடற்கரை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்தில் 28 ஆயிரம் ச.மீ. பரப்பளவில் குழந்தைகள் விளையாடும் திடல், கைப்பந்து/கபடி மைதானம், குத்துச்சண்டை வளாகம், உடற்பயிற்சிக் கூடம், தியான மண்டபம், சாலையோர வியாபாரிகளுக்கான தளம், சிற்பங்கள், கடைகள், சூரிய மின் விளக்குகள், கண்காணிப்பு கேமரா, 5 ஒப்பனை அறைகள், தற்படம் (செல்ஃபி) எடுக்கும் வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமையவுள்ளன.

மேலும், சுமாா் 350 ச.மீ. பரப்பளவில் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இத்திட்டத்துக்கான பணிகளை திருவொற்றியூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், சிஎம்டிஏ செயற்பொறியாளா் பரமேஸ்வரி, மாமன்ற உறுப்பினா் கே.பி.சொக்கலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com