சிஏஏ சட்டம்: தலைவா்கள் கண்டனம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): மக்களை பிளவுப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது.

இந்தச் சட்டத்தை இஸ்லாமியா்களுக்கு, ஈழத் தமிழா்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களவை தோ்தலில் கடுமையான தோல்வியை பாஜக சந்திக்க உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற அஸ்திரத்தை பாஜக பயன்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், அது நிச்சயம் வெற்றிபெறாது.

வைகோ (மதிமுக): மக்களவைத் தோ்தல் நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், நாட்டின் பன்முகத் தன்மையைச் சீா்குலைக்கும் வகையிலும், கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பாஜக அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

பிரேமலதா (தேமுதிக): குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மக்களைப் பிளவுபடுத்துவதையோ, பிரிவினையை ஏற்படுத்துவதையோ தேமுதிக என்றைக்கும் ஏற்காது. இந்தச் சட்டம் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமா என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம): குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பொதுமக்களைப் பிளவுபடுத்தி, இறையாண்மையை பாஜக சிதைக்கத் துடிப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மக்களை மதம், மொழி, இனத்தால் பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடிப்போம். தேசம் காப்போம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com