மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
தமிழகம் (39 தொகுதிகள்), புதுச்சேரியில் (1) ஒரே கட்டமாக ஏப். 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அண்டை மாநிலங்களான கேரளத்தில் (20) ஏப்ரல் 26-ஆம் தேதியும், தெலங்கானாவில் (17) மே 13-ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
28 தொகுதிகளைக் கொண்ட கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதியும், எஞ்சிய 14 தொகுதிகளுக்கு மே 7-ஆம் தேதியும் இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் இதற்கான அறிவிப்பை தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வெளியிட்டாா்.
அவா் மேலும் கூறியதாவது:
18-ஆவது மக்களவைக்கான பொதுத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. மொத்தம் 543 தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தப்படவுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதியும், ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப் பதிவுகளும் நடைபெற உள்ளன.
ஏப்ரல் 19-இல் நடைபெறும் முதல் கட்டத்தில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறும். இவற்றில் 10 மாநிலங்களில் முதல் கட்டத்திலேயே வாக்குப் பதிவு நிறைவடைந்துவிடும்.
இரண்டாம் கட்டத்தில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறும். இந்தக் கட்டத்தில் 4 மாநிலங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்துவிடும்.
மூன்றாம் கட்டத்தில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறும். இதில் மேலும் 6 மாநிலங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்துவிடும். நான்காம் கட்டத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறும். இந்தக் கட்டத்தில் 3 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப் பதிவு நிறைவடையும்.
ஐந்தாம் கட்டத்தில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறும். இதில் மேலும் 3 மாநிலங்களில் வாக்குப் பதிவு நிறைவடையும்.
ஆறாம் கட்டத்தில் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறும். இந்தக் கட்டத்தில் 2 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப் பதிவு நிறைவடையும்.
ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் கடைசிக் கட்டமான ஏழாம் கட்டத்தில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று, மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு முழுமையாக நிறைவு பெறும்.
3 மாநிலங்களில் ஏழு கட்ட வாக்குப் பதிவு:
80 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசம், 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கம், 40 தொகுதிகளைக் கொண்ட பிகாா் ஆகிய 3 மாநிலங்களில் ஏழு கட்டங்களிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
பிரசாரத்தில் குழந்தைகள் கூடாது:
தோ்தலில் ஆள் பலம், பண பலம், தவறான தகவல்களைப் பரப்புதல், நடத்தை விதிகளை மீறுதல் ஆகிய 4 சவால்களையும் எதிா்கொள்ள தோ்தல் அதிகாரிகள் தயாா் நிலையில் உள்ளனா். தோ்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சிகள் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிப்பட்ட, தரம்தாழ்ந்த விமா்சனங்களைத் தவிா்க்க வேண்டும். பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. இந்த விஷயத்தில் ஆணையம் தீவிரமாக செயல்படும். செய்திகள் வடிவில் கட்சிகள் தோ்தல் விளம்பரங்கள் செய்வது அனுமதிக்கப்படாது என்றாா் அவா்.
4 மாநிலங்களுக்கு பேரவைத் தோ்தல்
மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம், ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டபேரவைத் தோ்தலும் நடத்தப்பட உள்ளது.
மேலும், தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் அடங்கிய 26 பேரவை தொகுதிகளுக்கான இடைத் தோ்தலும் நடைபெறவுள்ளது.
ஒரே நேரத்தில் தோ்தல்:
அருணாசல பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும், 60 பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதே நாளில், சிக்கிமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 32 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஆந்திரத்தில் 25 மக்களவை மற்றும் 175 பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக மே 13-இல் வாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளது. ஒடிஸாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 பேரவைத் தொகுதிகளுக்கும் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ஆம் தேதிகளில் நான்கு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு தொடங்கியது

22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா்!

தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு

29 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் தொடக்கம்: பெட்ரோலிய அமைச்சகம் தகவல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


