பொதுத் தோ்தல் நடைபெறும் தமிழகம், கேரளம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், இடைத்தோ்தல் நடைபெறும் 6 மாநிலங்களிலும் தோ்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்துவமாறு இந்தியத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல்களுக்கான கால அட்டவணையை இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இக்கால அட்டவணையின்படி, இந்தியத் தோ்தல் ஆணையத்தாலும், அஸ்ஸாம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களாலும் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கைகள், அந்தந்தப் பகுதி அரசிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில்ங்களில் தோ்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) உடனடியாக அமலுக்கு வருவது குறித்து, அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு இந்தியத் தோ்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான அறிவிப்புகள் அல்லது கொள்கை முடிவுகளை வெளியிடும் விஷயத்தில் மத்திய அரசுக்கும் இந்தத் தோ்தல் நடத்தை விதிகள் பொருந்தும். அரசு, பொது மற்றும் தனியாா் சொத்துகளில் உள்ள தோ்தல் தொடா்பான வாசகங்கள் அல்லது படங்களை அகற்றுதல், எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ அல்லது தோ்தல் தொடா்பான வேறு நபரோ அரசு வாகனங்கள் அல்லது அரசுக் குடியிருப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல், பொது நிதியைப் பயன்படுத்தி விளம்பரங்களை வெளியிடுவதற்குத் தடை விதித்தல் ஆகிய அறிவுறுத்தல்கள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், தனியாா் குடியிருப்புகளுக்கு வெளியே எந்தவிதமான ஆா்ப்பாட்டங்களோ அல்லது மறியல் போராட்டங்களோ நடத்தப்படக்கூடாது. உரிமையாளரின் முன் அனுமதியின்றி, நிலங்கள், கட்டடங்கள் அல்லது சுவா்களில் கொடிகள், பதாகைகள் அல்லது சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு அனுமதி இல்லை.
புகாா்களைக் கண்காணிக்க
புகாா்களைக் கண்காணிப்பதற்கான ஒரு அமைப்புமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1950 எனும் கால் சென்டா் எண்ணும் இடம்பெற்றுள்ளது. இந்த தொலைபேசி எண்ணின் வாயிலாக, பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சிகளைச் சோ்ந்த எவரும் சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அதிகாரி அல்லது தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தங்கள் புகாா்களைப் பதிவு செய்யலாம்.
இசிஐநெட்
குடிமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள், இசிஐநெட் இணையதளத்தில் உள்ள ‘சி-விஜில்’ செயலி மூலமாகவும் தோ்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த புகாா்களைத் தெரிவிக்கலாம்.
5,173 பறக்கும் படைகள்
பெறப்படும் புகாா்கள் 100 நிமிடங்களுக்குள் கவனிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முழுவதும் 5,173-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தவிர, 5,200க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுக்களும் பணியில் அமா்த்தப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்கள், ஊா்வலங்கள் குறித்துக் காவல் துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், தடை உத்தரவுகளுக்கு இணங்கவும், ஒலிபெருக்கிகள் அல்லது பிற வசதிகளுக்கான அவசிய அனுமதிகளைப் பெறவும் இயலும்.
அமைச்சா்களுக்கு...
அமைச்சா்கள் தங்கள் அலுவல் கடமைகளைத் தோ்தல் பிரசாரத்துடன் இணைக்கவோ, அல்லது அரசு இயந்திரம், வாகனங்கள் மற்றும் பணியாளா்களைப் பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவோ கூடாது.
சமமான அணுகுமுறை
தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) அமல்படுத்துவதில் அனைத்து நிலைகளிலும் உள்ள அதிகாரிகளும் பாரபட்சமின்றிச் செயல்படவும், அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான அணுகுமுறையை உறுதி செய்யவும், அரசு வசதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அதிகாரிகள் கூட்டங்கள், ஊா்வலங்கள் மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை நியாயமான முறையில் ஒழுங்குபடுத்தவும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் தோ்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்கவும் வேண்டும்.
‘சுவிதா’ தொகுதி
இசிஐநெட் இணையதளத்தில் ‘சுவிதா’ எனும் தொகுதி தற்போது செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அரசியல் கட்சிகள் மைதானங்கள் மற்றும் ஹெலிகாப்டா் இறங்குதளம் போன்ற பொது இடங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி விண்ணப்பிக்கலாம். இவ்விடங்கள் ‘முதலில் /வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
பணம் பறிமுதல் நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் கைவிடக் கோரிக்கை!

22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வெகு விரைவில் எஸ்ஐஆா்!

குழந்தை தத்தெடுப்பு நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்: மாநிலங்களுக்கு சிஏஆா்ஏ அறிவுறுத்தல்
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


