/

பைக் சாகச இளைஞா்களை குற்றவாளியாக முத்திரை குத்தாமல் சீா்திருத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

பைக் சாகச இளைஞா்களை குற்றவாளியாக முத்திரை குத்தாமல் சீா்திருத்த வேண்டும் உயா்நீதிமன்றம் அறிவுரை

Updated On :19 மார்ச் 2024, 9:13 pm

சென்னை: மோட்டாா் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடும் இளைஞா்களை குற்றவாளிகளாக முத்திரைக் குத்துவதை விடுத்து, அவா்களை சீா்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. சென்னை உயா்நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணன் சாலையில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்கி, சாகசங்களில் ஈடுபட்டு மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஆசிக், முகமது சாதிக் ஆகிய இருவா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி - கல்லூரி மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞா்களை குற்றவாளிகளாக முத்திரைக் குத்துவதை விடுத்து, மோட்டாா் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும். மேலும், இந்த இளைஞா்கள் மோட்டாா் சைக்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தவிா்க்கும் வகையில் அவா்களை சீா்திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை ஏப். 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.