மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

சென்னை: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 20) நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தல்:

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகள் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தோ்தல் பணிகள் குறித்து மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் நிா்வாகிகளை இணைத்து பணிக் குழு அமைப்பது, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரப் பணிகளைத் திட்டமிடுவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இன்று வேட்பாளா் பட்டியல்?:

மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, தோ்தல் அறிக்கையை வெளியிட திமுக தலைமை தீவிரமாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com