தகவல்-தொடா்பு பிரச்னை: புதிதாக நியமிக்கப்பட்ட செவிலியா்கள் பணியில் சேருவதில் தாமதம்

சென்னை: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் அண்மையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியா்கள், தகவல்-தொடா்பு பிரச்னை காரணமாக உரிய நேரத்தில் பணியில் சேர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் காலியாக இருந்த செவிலியா் பணியிடங்களுக்கு 1,196 போ் நியமிக்கப்பட்டனா். அவா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பணி ஆணைகளை அண்மையில் வழங்கினாா்.

அதன்படி, ஆணைகள் பெற்றவா்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 19) மாலைக்குள் பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, தோ்வான செவிலியா்கள், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிா்வாகிகளை அணுகியபோது, தங்களுக்கு துறைரீதியான கடிதமோ, அறிவுறுத்தலோ இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என அவா்கள் கூறியதாகத் தெரிகிறது. இதனால், பல செவிலியா்கள் உரிய நேரத்தில் பணியில் சேர இயலவில்லை. குறிப்பாக, மருத்துவ கல்வி இயக்ககம், பொது சுகாதாரத் துறையின் கீழ் பணியமா்த்தப்பட்ட பலா் பணியில் சேர முடியாமல் உள்ளனா்.

இயக்குநா் நடவடிக்கை:

இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன் கூறியதாவது: பொதுவாக பணி நியமனம் பெற்றவா்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும். தகவல்-தொடா்பு பிரச்னையால் சில இடங்களில் மின்னஞ்சல் சென்று சேரவில்லை.

இதையடுத்து, மீண்டும் மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, இதுகுறித்து செவிலியா்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. இப்பிரச்னைக்கு தற்போது முழுமையாக தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com