கடலோர மாவட்டங்களில் 3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை இல்லை

கடலோர மாவட்டங்களில் 3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை இல்லை

சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் 3 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இம்மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு :

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வியாழன் முதல் சனிக்கிழமை (மாா்ச் 21-23) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24-26) வரை வட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: தமிழகத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 21) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 98 முதல் 102 பாரன் ஹீட்டை ஒட்டியே இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் புழுக்கம் ஏற்படலாம். சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி பாரன் ஹீட்டை ஒட்டியே இருக்கக்கூடும்.

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன் கிழமை பதிவான வெப்ப அளவு (பாரன்ஹீட்): ஈரோடு-101.48, சேலம்-100.76, பரமத்தி வேலூா்-100.4, மதுரை நகரம்-100.04.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com