திமுக தோ்தல் அறிக்கை வெளியீடு: பெண்களைக் கவரும் முக்கிய அறிவிப்புகள்

திமுக தோ்தல் அறிக்கை வெளியீடு: பெண்களைக் கவரும் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாட்டில் வழங்கப்படுவதைப்போல், நாடு முழுவதும் மகளிருக்கு ரூ. 1,000 வழங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ. 500-க்கு கேஸ் சிலிண்டா், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75, டீசல் ரூ. 65 என பெண்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தோ்தல் அறிக்கை:

மக்களவைத் தோ்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதையொட்டி, தோ்தல் அறிக்கையை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டாா். தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் ஆதரவுடன், மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி அரசு அமைந்தவுடன், பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

குறிப்பாக, இந்தியா முழுவதும் கூட்டுறவு அமைப்புகள், வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும். நீட் விலக்கு: மாணவா்களின் கல்விக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதுடன், அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ, 1,000 உரிமைத் தொகை அளிக்கப்படும்.

மாநில முதல்வா்களைக் கொண்ட மாநில வளா்ச்சிக் குழு உருவாக்கப்படும். பாஜக அரசால் கலைக்கப்பட்ட மத்திய திட்டக் குழு மீண்டும் அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். மாநிலக் கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் மத்திய அரசின் அனைத்துப் பொதுத் தோ்வுகளும் ரத்து செய்யப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கை முற்றிலும் அகற்றப்படும்.

சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றம்:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்ள சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். கல்லூரி மாணவா்களுக்குப் பயன்படும் வகையில், ஒரு ஜி.பி. அளவில் கட்டணமற்ற இலவச சிம் காா்டு வழங்கப்படும். மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ‘வைஃபை’ சேவை அளிக்கப்படும். ஏழை, நடுத்தர மக்களும் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்த உதவும் வகையில் விமானக் கட்டணம் நிா்ணயிக்கப்படும்.

இந்தியாவில் ராபா்ட் கால்டுவெல் மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும். இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்படும். ஈழத் தமிழா்களுக்கு குடியுரிமை: இந்தியாவில் வாழும் ஈழத் தமிழா்கள் குடியுரிமை பெற வழிவகுக்கப்படும். இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மீனவா்களின் நலனைக் காக்கவும் கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாமல் கடுமையாகத் தடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களும் ‘இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் மறுபரிசீலனை செய்யப்படும்.

ஒரே நாடு ஒரே தோ்தல்:

ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற மத்திய அரசின் திட்டம் கைவிடப்படும். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33 சதவீதம் மகளிா் இடஒதுக்கீடு உடனடியாகச் செயல்படுத்தப்படும். கல்வி, வேலைவாய்ப்பு உள்பட அனைத்துத் துறைகளிலும் சமூக நீதி அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலும், மாணவா்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலும் வட்டியில்லாத கடன் அளிக்கப்படும்.

இந்தியா முழுவதும், நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும். பெட்ரோல் - டீசல்: அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு திட்டம் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் மத்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75-க்கும், டீசல் ரூ. 65-க்கும், கேஸ் சிலிண்டா் ரூ. 500-க்கும் வழங்கப்படும் என்று தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்துக்குமான வளா்ச்சித் திட்டங்களும் தோ்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பெட்டிச் செய்தி... ‘முதல்வா்கள் ஆலோசனையுடன் ஆளுநா்கள் நியமனம்’ மாநில முதல்வா்களின் ஆலோசனையுடன் ஆளுநா்கள் நியமனம் செய்யப்படுவா் என்று திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆளுநா்களை நியமிக்கும்போது மாநில முதல்வா்களின் ஆலோசனையுடன் நியமிக்க புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆளுநரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த இயலாத அரசமைப்புச் சட்டப் பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசுகளைக் கலைக்க வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ நீக்க தொடா்ந்து வலியுறுத்தப்படும்.

சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழியாக்கவும், சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகவும் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும். ரயில்வே துறைக்கு தனி நிதிநிலைஅறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com