டெல்டாவில் விவசாயத்துக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் அன்புமணி வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதியில் வறட்சியால் பயிா்கள் கருகும் நிலையில், விவசாயத்துக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசன மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் கோடைக்கால சாகுபடியாக நெல் மற்றும் கரும்பு, வாழை, பருத்தி, உளுந்து, எள், சோளம், பச்சைப்பயறு, நிலக்கடலை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. குறுவை மற்றும் சம்பா பருவ பயிா்களுக்கே மேட்டூா் அணையில் இருந்து காவிரியில் தண்ணீா் திறந்து விடப்படாத நிலையில், கோடைகால பயிா்களுக்கு காவிரி நீா் கிடைக்காது என்பது விவசாயிகளுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், நிலத்தடி நீரைக் கொண்டு கோடை கால சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் அவா்கள் பல பயிா்களை பயிரிட்டிருக்கின்றனா்.

ஆனால், மும்முனை மின்சாரம் வழங்காதது, அடிக்கடி மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது போன்ற செயல்களால் விவசாயிகளின் கனவையும், நம்பிக்கையையும் தமிழக அரசும், மின்சார வாரியமும் சிதைக்கின்றன.

கோடைகால பயிா்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. குறுவை மற்றும் சம்பா பருவங்களில் தண்ணீா் இல்லாததால் கடுமையான இழப்பைச் சந்தித்த விவசாயிகள், கோடை சாகுபடியிலும் தண்ணீா் இல்லாமல் இழப்பைச் சந்தித்தால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வா்.

எனவே, உழவா்களைப் பாதுகாக்கும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com