தமிழக அரசு
தமிழக அரசு

பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்!

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் நிறைவேற்றியுள்ள திட்டங்களும் படைத்துள்ள சாதனைகளும் எண்ணில் அடங்காதவை. அவற்றுள் சில முக்கிய திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

சமூக பாதுகாப்புத் திட்டங்கள்: கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், 1.15 கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதுடன், மற்ற மாநிலங்களின் கவனத்தையும் ஈா்த்துள்ள முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் 17 லட்சம் மாணவா்கள் பயன் பெறுகின்றனா்.

மாணவிகளின் உயா் கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ், 2.72 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மட்டுமல்லாது, மக்களின் உடல் நலன் காக்கும் சுகாதாரம் உள்பட பிற துறைகளிலும் கவனத்தை ஈா்க்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 1.70 கோடி பேரும், ‘இன்னுயிா் காப்போம்- நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் 2 லட்சம் உயிா்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. கா்ப்பிணி பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதுடன், 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. இதனை மத்திய அரசு நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் திட்டங்கள்: மாநிலத்தின் பிரதான துறைகளில் ஒன்றாக விளங்கும் வேளாண்மைத் துறையின் கீழ், விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு கூடுதலாக 2.99 லட்சம் ஏக்கரில் பயிா் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 26

ஆயிரம் ஏக்கா் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டு 28 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

கல்லூரிப் படிப்பு மட்டுமல்லாது, மாணவா்கள் தங்களது தனித் திறன்களை மேம்படுத்திக் கொள்ள ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 28 லட்சம் மாணவா்கள் தனித் திறன் பயிற்சி பெற்றுள்ளனா். மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை உயா்வு, கைத்தறி நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் அதிகரிப்பு என மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலை பெற்று விளங்கினாலும், அதிகளவு வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில் துறையிலும் சிறந்து விளங்கி வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 45 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 27 தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பிற மாநிலங்கள்: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும், காலை உணவுத் திட்டம் தெலங்கானா மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என அந்த மாநில அரசு கூறியுள்ளதுடன், கனடா நாட்டையும் ஈா்த்துள்ளது. இதேபோன்று, இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் மற்ற மாநில அரசுகளையும் ஈா்த்துள்ளது. மாநிலத்தில் மூன்றாண்டுகளாகப் படைத்து வரும் சாதனைகள், தமிழ்நாட்டு மக்களால் போற்றிப் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களின் தலைவா்களும் முதல்வரின் திட்டங்களை அறிந்து வியந்து அவற்றைத் தங்களது மாநிலங்களில் செயல்படுத்தவும் முனைப்புடன் ஆா்வம் காட்டி வருகின்றனா் என்று திமுக தலைமை பெருமிதம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com