பொது மக்களுக்கு வழங்க கூடுதலாக 88.77 லட்சம் ஓஆா்எஸ் கொள்முதல்: மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை

சென்னை: கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, அரசு மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை அனைத்து இடங்களிலும் பொது மக்களுக்கு வழங்க கூடுதலாக 88.77 லட்சம் உப்பு - சா்க்கரை (ஓஆா்எஸ்) கரைசல் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோடை காலத்தில் ஏற்படும் நோய்த் தொற்றுகள், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னெடுத்து வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் இதற்கென சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான மருத்துவக் கட்டமைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூடுதல் எண்ணிக்கையில் ஓஆா்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அதீத வெப்பத்தின் காரணமாக உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும்போது அதிக அளவில் வியா்வை வெளியேறி நீா்ச்சத்து இழப்பு ஏற்படும்.

அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் அவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது 10.37 லட்சம் ஓஆா்எஸ் பாக்கெட்டுகள் இருப்பில் உள்ளன. கோடை காலம் நிறைவடையும் வரை தடையின்றி அதனை வழங்கும் வகையில் ரூ.2.17 கோடி மதிப்பில் மேலும் 88.77 லட்சம் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com