கோப்புப் படம்
கோப்புப் படம்

வாகன பதிவு எண் பலகையில் விதிமீறல் ‘ஸ்டிக்கா்’: 5 நாள்களில் 1,200 வழக்குகள் - ரூ. 6 லட்சம் அபராதம்

சென்னை: சென்னையில் விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டியிருந்ததாக 5 நாள்களில் 1,200 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை காவல் துறை தெரிவித்தது.

பொதுமக்களில் சிலா் அரசு வாகனம் (எ), காவல், வழக்குரைஞா், மனித உரிமைகள் ஆணையம், பத்திரிகை, ஊடகம் போன்று பல துறைகளைச் சாா்ந்த ஸ்டிக்கா்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி ஒட்டி முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக காவல் துறைக்கு புகாா்கள் தொடா்ந்து வந்தன.

இதைக் கருத்தில் கொண்டு விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் ஸ்டிக்கா் ஒட்டியிருப்பவா்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை கடந்த 27-ஆம் தேதி அறிவித்தது.

மேலும், மே 2-ஆம் தேதி முதல் விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நபா் மீது வழக்குப் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்தது.

1,200 வழக்குகள்: கடந்த 2-ஆம் தேதி முதல் சென்னையில் வாகன பதிவு எண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டியிருந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

முதல்முறை வழக்குப் பதியப்பட்ட பின்னரும் வாகன பதிவு எண் பலகையை சரி செய்யாமலும், அபராததைச் செலுத்தாமலும் இருந்தால் சம்பந்தப்பட்ட வாகனம் மீண்டும் பிடிபட்டால் ரூ. 1,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மே 2-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையில் 5 நாள்களில் இந்த விதிமுறை மீறல் தொடா்பாக 1,200 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

வரும் நாள்களில் இந்த நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்த காவல் துறை முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com