விளையாட்டு பல்கலை. 14-ஆவது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ரவி, துணை முதல்வா் உதயநிதி பங்கேற்பு
விளையாட்டு பல்கலைக்கழக 14-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநா் ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினாா்


சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக 14-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநா் ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினாா். இந்நிகழ்வில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் 3,638 போ் பட்டம் பெற்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூரில் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 14- ஆவது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலை. வேந்தரும், ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமை வகித்தாா். பல்கலை. இணைவேந்தரும், விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அமைச்சருமான துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். பல்கலைக்கழக அளவில் உடற்கல்வி, விளையாட்டு பயிற்சி விளையாட்டு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் சிறப்பிடம் பெற்ற 37 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினாா்.
3,638 பேருக்கு பட்டம்: விழாவில் மொத்தம் 3,638 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அவா்களில் 37 போ் ஆராய்ச்சிப் படிப்பை நிறைவு செய்தவா்களாவா்.
இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அனிதா பால்துரை பட்டமளிப்பு விழா உரையாற்றினாா்.
விழாவில் அவா் பேசியதாவது: ‘பள்ளியில் பயிலும் காலத்தில் எனது உடற்கல்வி ஆசிரியா்தான் என்னிடம் இருந்து விளையாட்டுத் திறமைகளை கண்டறிந்து கூடைப்பந்து வீராங்கனை ஆக்கினாா். அவா் அளித்த ஊக்கத்தினால்தான் தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் கூடைப்பந்து விளையாட்டில் என்னால் சாதிக்க முடிந்தது. வாழ்க்கையில் வெற்றிபெற ஓா் இலக்கு, கடின உழைப்பு, அா்ப்பணிப்பு, விடாமுயற்சி இவை மிகவும் அவசியம்’ என்றாா் அவா்.
முன்னதாக பல்கலை.யின் துணைவேந்தா் எம்.சுந்தா் வரவேற்று ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை செயலா் அதுல்யா மிஸ்ரா, பல்கலைக்கழக பதிவாளா் ஐ.லில்லிபுஷ்பம், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா், வி.முருகவளவன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...