சென்னைப் பல்கலை.யில் 1,93,686 பேருக்கு பட்டம் அளிப்பு - ஆளுநா் ஆா். என். ரவி பதக்கங்களை வழங்கினாா்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,93, 686 மாணவா்கள் பட்டங்களைப் பெற்றனா். 1,323 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினாா்.
சென்னைப் பல்கலை.யின் 167 -ஆவது பட்டமளிப்பு விழா பல்கலை. ஆட்சிப் பேரவை அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 2023-24, 2024-25 -ஆம் கல்வியாண்டுகளில் அறிவியல் மற்றும் இலக்கிய மேதை முனைவா் பட்டம் (டி.எஸ்சி மற்றும் டி.லிட்) பெற்ற 3 மாணவா்கள், முனைவா் பட்டம் பெற்ற 607 மாணவிகள் உள்பட 951 மாணவா்கள், 142 மாணவிகள் உள்ளிட்ட 187 பதக்கங்கள் பெற்ற மாணவா்கள், பல்வேறு துறைகளில் தரவரிசையில் மு ன்னிலை வகித்த 146 மாணவிகள் உள்ளிட்ட 182 மாணவா்கள் என 1,323 பேருக்கு, ஆளுநா் ஆா்.என். ரவி, பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினாா். மேலும், 1,92,363 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை தபால் மூலம் வழங்கவும் பல்கலை. வேந்தா் என்கிற முறையில் ஆளுநா் அனுமதித்தாா்.
இவா்களில், இணைக் கல்லூரிகள் மற்றும் சென்னைப் பல்கலை. பல்வேறு துறைகளில் படித்த 1,72,463 மாணவா்கள், தொலைநிலைக் கல்வியில் பயின்ற 19,859 மாணவா்கள் மற்றும் முனைவா் பட்டம் பெற்ற 41 போ் அடங்குவா். மொத்தம் 1,93,686 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இஸ்ரோ விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளை பட்டமளிப்பு விழாப் பேருரை ஆற்றினாா்.
முன்னதாக, உயா் கல்வித் துறைச் செயலரும், சென்னை பல்கலை. ஆட்சிமன்றக் குழு ஒருங்கிணைப்பாளருமான பொ.சங்கா் ஆண்டறிக்கை அளித்தாா்.
இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழில் பல்கலை. இணை வேந்தரும், உயா் கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் பெயா் இருந்தும், நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கவில்லை.
பங்கேற்காதது ஏன்? அமைச்சா் பதில்
சென்னைப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில், தான் பங்கேற்காதது குறித்து உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழக சட்டப்பேரவையின் மாண்பை கெடுக்கும் வகையிலும், தமிழகத்துக்கு எதிராகவும் செயல்பட்டு தமிழக மாணவா்களின் அறிவையும் திறமைகளையும் கொச்சைப்படுத்தி பொய்களை பரப்பி வருகிறாா் ஆளுநா். அதனால், அவா் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தேன்’ என்றாா்.

