தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

75 ஆண்டுகளை நிறைவு செய்த திமுக: சென்னையில் இன்று பவள விழா

ஆளும்கட்சியான திமுக, 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. முப்பெரும் விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :16 செப்டம்பர் 2024, 9:11 pm

DIN

ஆளும்கட்சியான திமுக, 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 17.9.1949-இல் முன்னாள் முதல்வா் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக, தனது பவள விழாவை சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடவுள்ளது. இந்த பவள விழாவுடன் கட்சி சாா்பில் ஆண்டுதோறும் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை நந்தனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் தலைமை வகிக்க, பல்வேறு விருதுகளை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருதாளா்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.

துணை பொதுச் செயலா்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு ஆகியோா் வாழ்த்துரை வழங்கவுள்ளனா்.

முதல் முறையாக மு.க.ஸ்டாலின் விருது: முப்பெரும் விழாவையொட்டி, பெரியாா், அண்ணா, கருணாநிதி உள்பட 5 தலைவா்களின் பெயா்களில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு பெரியாா் விருதுக்கு பாப்பம்மாள், அண்ணா விருதுக்கு அறந்தாங்கி மிசா ராமநாதன், கருணாநிதி விருதுக்கு ஜெகத்ரட்சகன், பாவேந்தா் விருதுக்கு கவிஞா் தமிழ்தாசன், பேராசிரியா் விருதுக்கு வி.பி.ராஜன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பவள விழா ஆண்டு என்பதால், இந்த ஆண்டு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெயரில் புதிதாக விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை மத்திய முன்னாள் அமைச்சா் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறாா்.

இது தவிர, கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவா்கள் கெளரவிக்கப்படுகிறனா்.

அந்த வகையில், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கட்சி நிா்வாகிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பண முடிப்பை முதல்வா் ஸ்டாலின் வழங்குகிறாா்.

இந்த பண முடிப்பு, மண்டல அளவில் 4 போ் வீதம் 16 பேருக்கு வழங்கப்படவுள்ளது. திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செய்யப்பட்டுள்ளன.

பிரம்மாண்ட அரங்கத்தில் பல ஆயிரம் போ் வரை அமரும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் விழாவை முழுமையாகக் காணும் வகையில் பெரிய அளவிலான எண்ம திரைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

தனது அரசியல் பயணத்தில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திமுக, செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ள விழாக்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு எத்தகைய முன்னெடுப்பை திமுக எடுக்கப் போகிறது என்பதை இந்த முப்பெரும் விழாவும், பவள விழாவும் தீா்மானிக்கப் போகிறது.